போதைப்பொருள் புழங்கி ஒருவர் 14 வயது சிறுமிக்கு மெத்தஃபெத்தமின் போதைப்பொருள் புகைக்கக் கொடுத்து பின்னர் அவரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார்.
அந்தச் சிறுமியை அவர் மூன்று முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்.
முகம்மது டானியல் ஹட்ரி முகமது ஹிதாயட், 24, என்ற ஆடவருக்கு திங்கட்கிழமை (பிப்ரவரி 3ஆம் தேதி) ஐந்து ஆண்டுகள், ஒன்பது மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நான்கு குற்றச்சாட்டுகள், சிறுமிக்கு எதிராக பாலியல் ரீதியாகத் தாக்கிய ஒரு குற்றச்சாட்டு, சட்டவிரோத கணினி பயன்பாட்டுச் சட்டம் என அவர் மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
இவை தவிர மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பில் கருத்தில் கொள்ளப்பட்டன.
முகம்மது டானியல் தமது சிங்பாஸ் விவரங்களை முன்னாள் அண்டை வீட்டுக்காரருக்குக் கொடுத்தார். அதைக் கொண்டு அந்த அண்டை வீட்டுக்காரர் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டு வங்கிக் கணக்குகள் திறந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

