ஆர்டிஎஸ் ரயில் சேவைக் கட்டமைப்பில் பல பொறியியல் சவால்கள் உள்ளடக்கம்

ஆர்டிஎஸ் ரயில் சேவைக் கட்டமைப்பில் பல பொறியியல் சவால்கள் உள்ளடக்கம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

08 Oct 2026 - 11:38 am

2 mins read

ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ‘ஆர்டிஎஸ்’ விரைவு ரயில் இணைப்புத் திட்டம் இரு நிலையங்களுக்கு இடையே உள்ள சாதாரண கட்டமைப்பு என்று சாதாரணமாக எண்ணிவிடமுடியாது.

அதனுள் பல பொறியியல் சவால்கள் நிறைந்துள்ளன. பாதுகாப்பான நம்பகத்தன்மைமிக்க பயணத்தை உறுதிசெய்வதில் பொறியியல் கட்டமைப்பை கவனமாக அடிப்படைக் கடமை என்று அத்திட்டத்தை ஜோகூர் பாருவில் நிர்வகிக்கும் ‘ஆர்டிஎஸ்ஓ’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரயில் இணைப்புத் திட்டத்தில் பல செயலமைப்புகள் ஒருங்கிணைந்து இயங்கவேண்டியுள்ளது. அவற்றைத் தடையின்றி செயல்பட வைப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் பற்பல சிக்கலான பொறியியல் வடிவமைப்புகள் உள்ளடங்கியுள்ளன என அவர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) விளக்கினார்.

ஆர்டிஎஸ்ஓ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மர்ஸூக்கி அரிஃபின் அவரது கருத்துகளை அன்றைய தினம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

இருநாடுகளுக்கும் இடையே நடைபெறும் பொறியியல் செயல்பாடுகள், சோதனைகள், ஒத்துழைப்பு போன்ற பல உறுதிசெய்யப்படவேண்டிய அம்சங்களை அவர் பதிவில் முன்வைத்தார். இருப்பினும் நான்கு நாள்களுக்கு முன் சேவை தாமதப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு அவைதான் காரணங்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இவ்வாண்டு இறுதிக்குள் இருநிலையங்களுக்கான பயணிகள் சேவை தொடங்கப்படலாம் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் அக்டோபர் 2ஆம் தேதி, இருநாட்டு அரசாங்க அதிகாரிகளும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயணிகள் சேவை தொடங்கலாம் என்று கூட்டாக அறிவித்தனர்.

உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்துக்கும் ஜோகூர் பாருவின் புக்கிட் சாகார் நிலையத்துக்கும் இடையே உள்ள நான்கு கிலோமீட்டர் தூரத்தை ஆர்டிஎஸ் விரைவு ரயில் பயணம் இணைக்கும்.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்ஜோகூர் பாருரயில்ஆர்டிஎஸ்அரசாங்கம்அறிவிப்புதாமதம்பயணம்பயண சேவைரயில் சேவை