மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) அதன் விரிவாக்கப் பணிகளுக்கான செலவுக்காக ஏறத்தாழ $12 பில்லியனைக் கடனாகப் பெற முயல்கிறது.
இது சாத்தியமானால், சிங்கப்பூரில் வழங்கப்பட்ட ஆகப் பெரிய கடன் தொகையாக இது விளங்கும்.
டிபிஎஸ் வங்கி, மலாயன் பேங்கிங், ஓசிபிசி வங்கி, யூஓபி ஆகியவை இந்தக் கடன் தொகையை வழங்குவதன் தொடர்பில் இணைந்து செயல்படுவதாகத் தகவலறிந்தோர் கூறுகின்றனர்.
பேச்சுகள் தொடர்வதால் இன்னும் இதற்கான இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்பட்டது.
ஏற்கெனவே ஆகஸ்ட் 2019ல் வாங்கப்பட்ட $4 பில்லியன் கடனை எம்பிஎஸ் ஏழு ஆண்டுகளுக்குள் அடைக்கவேண்டும். அதன் தொடர்பிலான நிபந்தனைகளைத் திருத்தி அமைக்கவும் இந்தக் கடன் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
ஒருங்கிணைந்த உல்லாசத் தலத்தின் உத்தேச விரிவாக்கப் பணிகளுக்கும் இந்தக் கடன் தொகை உதவும். முன்னர் பரிந்துரைக்கப்பட்டதைவிட அதற்கான செலவு இப்போது இருமடங்குக்கும் கூடுதலாகியுள்ளது.
தற்போது இதுகுறித்த மேல்விவரங்கள் ஏதும் இல்லை என்று எம்பிஎஸ் நிறுவனப் பிரதிநிதி கூறினார். தாய் நிறுவனமான லாஸ் வேகாஸ் சேண்ட்ஸ் இதுகுறித்துக் கருத்துரைக்க மறுத்துவிட்டது.
விரிவாக்கப் பணிகளுக்குத் தற்போது 8 பில்லியன் அமெரிக்க டாலர் (S$10.7 பில்லியன்) ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2019ல் 3.4 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகுமென்று கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றால், புதிதாக அமையவிருக்கும் நான்காவது உயர்மாடிக் கட்டடம் உட்பட எம்பிஎஸ் விரிவாக்கப் பணிகள் 2031ஆம் ஆண்டுத் தொடக்கத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அக்டோபர் மாத வருவாய் அறிக்கையில் நிறுவனம் கூறியிருந்தது.
15,000 பேர் அமரக்கூடிய நிகழ்ச்சி அரங்கம், கருத்தரங்க நிலையம் போன்றவையும் விரிவாக்கப் பணிகளில் அடங்கும்.
இதற்கு முன்னர் சிங்கப்பூரில் வழங்கப்பட்ட ஆகப் பெரிய கடன் தொகை, உணவு,பானத் தயாரிப்பு நிறுவனத்தை வாங்குவதற்காக தாய்லாந்துப் பெரும்பணக்காரரின் டிசிசி அசெட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு இதன் தொடர்பில் $9.3 பில்லியன் கடனாக வழங்கப்பட்டது.

