தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கும்

மரினா சென்டர், கரையோரப் பூந்தோட்டங்களை இணைக்கும் பாலம்

2 mins read
8aae7b61-2339-4b15-b319-e7b86e1f5fff
புதிய பாலம் பெஞ்சமின் ‌ஷியர்ஸ் பாலத்துக்கு இணையாகக் கட்டப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மரினா சென்டரையும் கரையோரப் பூந்தோட்டங்களின் பே ஈஸ்ட் பூங்காவையும் இணைக்கும் புதிய பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதசாரிகளும் சைக்கிளோட்டிகளும் பயணம் செய்ய வசதியாக அமையும் அந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி 2029ஆம் ஆண்டு நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி அரசாங்கத்தின் ஜிபிஸ் (GeBiz) கொள்முதல் தளத்தில் பதிவேற்றப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களின்படி மரினா சென்டரையும் தஞ்சோங் ரூவையும் இணைக்கும் பெஞ்சமின் ‌ஷியர்ஸ் பாலத்துக்கு இணையொத்த நிலையில் கட்டப்படுகிறது.

மரினா செண்டரிலிருந்து பே ஈஸ்ட் பூங்காவுக்குச் செல்ல பாதசாரிகள், சைக்கிளோட்டிகள் தவிர உடற்குறையுள்ளோருக்கும் பாலம் உதவியாக இருக்கும்.

நெடுந்தொடர் ஓட்டம், நடையோட்டம் போன்ற மிகப் பெரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் பாலம் வகைசெய்ய வேண்டும் என்று ஏற்கெனவே கூறப்பட்டது.

பே ஈஸ்ட் பூங்கா, மரினா சென்டிரலில் எதிர்காலத்தில் வரவிருக்கும் பே செண்டிரல் பூங்கா ஆகியவற்றுக்கு இடையே மக்களைக் கொண்டு செல்லும் பகி (buggy) போன்ற வாகனங்களும் செல்வதற்கு வசதியாகப் பாலம் கட்டப்பட வேண்டும்.

நகரத்தையும் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தையும் இணைக்கும் புதிய பாலம் மரினா கால்வாயில் முக்கிய இடத்தைப் பிடிக்கவிருக்கிறது. பல்வேறு இடங்களிலிருந்து பாலத்தைக் காண முடியும் என்பதால் அது நீர்முகப்பின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.

ஃபார்முலா ஒன் கார் பந்தயம், மரினா கால்வாயில் நடைபெறவிருக்கும் நீர் விளையாட்டுகள் போன்ற அனைத்துலக நிகழ்ச்சிகளுக்குப் பாலம் ஒரு நல்ல பின்னணிச் சூழலையும் தரும் என்று அதிகாரிகள் கூறினர்.

பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றாலும் மரினா கால்வாயில் கப்பல்கள் செல்வதற்கான தடையற்ற பாதை இருப்பதையும் குத்தகையைப் பெறும் நிறுவனம் உறுதிசெய்ய வேண்டும்.

வடிவமைப்பு, கட்டுமானம் ஆகியவற்றுக்கான குத்தகையைப் பெறும் விண்ணப்பத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்