தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் காதலியின் புது காதலரைத் திருமணமான ஆடவர் தாக்கிய சம்பவம்

2 mins read
91244e46-6f6c-4304-b678-da404f51db63
தாக்குதல் ஜூன் 2021ல் சுவா சூ காங் அவென்யூ 3 புளோக் 407 கீழ்த்தளத்தில் நடந்தது. - படம்: ஷின் மின் டெய்லி நியூஸ்

திருமணமான ஓங் இங் சியூ, தன்னை விட்டுப் பிரிந்த முன்னாள் காதலியை ஓயாமல் துரத்தினார்.

பின்னர், பொறாமை காரணமாக 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுவா சூ காங்கில் அந்தப் பெண்ணின் புது காதலரைக் கத்தியைக் கொண்டு தாக்கினார் ஓங்.

அந்த 52 வயது காதலரைத் தாக்கிய பிறகு, தன்னுடைய 42 வயது முன்னாள் காதலியையும் ஓங் விட்டுவைக்கவில்லை. அவரையும் தாக்கினார் ஓங்.

“எல்லாவற்றுக்கும் நீதான் காரணம்,” என்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்றும் பல குரல் பதிவுகளை அந்த முன்னாள் காதலிக்கு ஓங் அனுப்பிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

தற்போது 64 வயதுடைய ஓங், ஜனவரி 23ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் கொலை முயற்சி தொடர்பான ஒரு குற்றச்சாட்டையும் வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.

மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான ஓங், 2019ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஒன்றரை ஆண்டுகளாக ‘பெர்லின்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்ட பெண்ணுடன் கள்ள உறவில் ஈடுபட்டிருந்தார்.

ஓங் திருமணமானவர் என்று பின்னர் அந்தப் பெண் கண்டுபிடித்து அவரிடம் கேட்கவே, தன் மனைவியைப் பிரிந்து வாழ்வதாக ஓங் பொய்யுரைத்தார்.

சூதாட்டத்தில் அதிகமாகச் செலவழித்த ஓங்குடன் உள்ள தம் உறவை முறித்துக்கொள்ள விரும்புவதாக அந்தப் பெண் கூறியதை அடுத்து, மீண்டும் வாய்ப்பு தருமாறு கோரி ஓங் தொடர்ந்து தன் முன்னாள் காதலிக்குக் குறுந்தகவல் அனுப்பினார்.

அதையடுத்து பெண்ணுக்குப் பலமுறை மிரட்டல் விடுத்தும் அச்சுறுத்தியும் வந்த ஓங், தன் முன்னாள் காதலி அவரின் காதலருடன் இருந்தபோது இருவரையும் தாக்கினார்.

தாக்குதல் காரணமாக திரு கூ என்ற அந்தப் புது காதலர் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டதுடன் ஒன்பது நாள்களுக்கு மருத்துவமனையில் இருந்தார்.

குறிப்புச் சொற்கள்