ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் புதிய வேலை பெறுவதில் சிரமம்: ஜாஸ்மின் லாவ்

ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் புதிய வேலை பெறுவதில் சிரமம்: ஜாஸ்மின் லாவ்

வேலைக்குத் திரும்பும் ‘பிஎம்இடி’ ஊழியர்களின் இடைநிலைச் சம்பளம் 25% குறைவு
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Oct 2026 - 7:30 pm

2 mins read

2026 இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,620ஆக உயர்ந்துள்ளது. இது, 2020க்குப் பிறகு அதிக எண்ணிக்கையாகும். ஆறு மாதங்களுக்குள் மீண்டும் வேலையில் சேர்ந்த உள்ளூர்வாசிகளின் விகிதம் 54.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. தகவல் தொடர்பு, நிதிச் சேவை, உற்பத்தி, நிபுணத்துவச் சேவைத் துறைகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

அதேவேளையில், புதிய பட்டதாரிகள் முழுநேர வேலைகளைப் பெற கூடுதல் காலம் ஆகிறது. ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களும் புதிய வேலைகளில் சேர்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்று மனிதவளத் தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆட்குறைப்பு இழப்பீட்டைச் சட்டபூர்வமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. 88 விழுக்காட்டு முதலாளிகள் இழப்பீடு வழங்கியுள்ள நிலையில், நிதி வசதியிருந்தும் வழங்க மறுப்போர்மீது நிர்வாக நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் நிதிச் சேவைகள் துறையிலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ள உள்ளூர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்குப் (பிஎம்இடி) பெரும்பாலான நேரங்களில் மறுவேலைவாய்ப்பு நிலவரம் சவாலாக அமைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, குறைந்த ஊதியத்தில் பணிக்குத் திரும்பும் பிஎம்இடி ஊழியர்கள் தங்களின் முந்தைய சம்பளத்திலிருந்து இடைநிலையாக 25 விழுக்காட்டுச் சம்பள வெட்டை எதிர்கொள்கின்றனர்.

கடந்த 14 காலாண்டுகளில், ஆட்குறைப்பு செய்யப்பட்ட உள்ளூர் பிஎம்இடி ஊழியர்கள் ஆறு மாதங்களுக்குள் வேலைக்குத் திரும்பும் விகிதம் நிதிச் சேவைத் துறையிலேயே மிகக் குறைவாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக மொத்த விற்பனைத் துறை இடம்பெற்றுள்ளது.

ஆட்குறைப்பு செய்யப்பட்ட உள்ளூர் பிஎம்இடி ஊழியர்களில் ஏறத்தாழ 10ல் ஏழு பேர் 12 மாதங்களுக்குள்ளும் 10ல் எட்டுப் பேர் ஈராண்டுகளுக்குள்ளும் மறுவேலைவாய்ப்பைப் பெற்றனர். இவ்விரு காலகட்டங்களிலும் வயதான ஊழியர்களுக்கு மறுவேலைவாய்ப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.

மீண்டும் வேலை பெற்றவர்களில் 10ல் ஆறு பேர் தங்களின் முந்தைய சம்பளத்தைவிட அதிக ஊதியம் பெற்றனர். குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்ந்தோர் தங்களின் முந்தைய சம்பளத்தைவிட இடைநிலையாக 25 விழுக்காடு குறைவாகப் பெற்றனர்.

ஆட்குறைப்பு செய்யப்பட்ட உள்ளூர்வாசிகளில் 40களிலும் 50களிலும் உள்ளோர் பாதிக்கும் மேலாக உள்ளனர். 2021ல் 51 விழுக்காடாக இருந்த பட்டதாரிகளின் விகிதம், 2025ல் 66.4 விழுக்காடாக உயர்ந்தது.

அதேவேளையில், உயர்நிலைக் கல்வியையும் அதற்கும் குறைவான கல்வித் தகுதியையும் கொண்டவர்கள் சராசரியாகக் குறைந்த காலகட்டத்திலேயே பணிக்குத் திரும்பினர்.

ஆட்குறைப்பு செய்யப்பட்டோர்க்கான ஆதரவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்த திருவாட்டி லாவ், வயது, திறன்கள், துறை சார்ந்த வேறுபாடுகளால் ஆட்குறைப்பு அனுபவம் அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை என்றார்.

புதிய பட்டதாரிகளுக்காகத் தொழிற்பயிற்சித் திட்டங்களும் திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன.

செயற்கை நுண்ணறிவால் பரவலான வேலையிழப்பு ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை என்றும் புதிய வேலைகளே உருவாவதாகவும் அமைச்சர் லாவ் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
ஆட்குறைப்புமனிதவள அமைச்சுவேலை