மனநலம் தொடர்பாக நிலவும் தவறான புரிதல்களைக் களைய அண்மைய ஆண்டுகளாக சிங்கப்பூர் பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தேசிய சமூக சேவை மன்றத்தின் ‘பியோன் த லேபல்’ போன்ற தேசிய இயக்கங்கள் நடத்தப்பட்டன.
அத்துடன் மனநலக் கழகத்தின் ‘மைன் மேட்டர்ஸ்’ போன்ற ஆய்வுகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், சிங்கப்பூரில் மனநலம் தொடர்பான தவறான புரிதல் குறைந்துள்ளது. பதற்றம் அல்லது மனஅழுத்தம் போன்றவை குறித்து கூடுதல் சிங்கப்பூரர்கள் மனம்விட்டு பேசத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, மனநலப் பிரச்சினை தொடர்பாக உதவி நாடுவது பலமாகக் கருதப்படுகிறது.
முன்பு அது பலவீனமாகக் கருதப்பட்டது.
இருப்பினும், மனநலம் தொடர்பாக மறைவாக இருக்கும் களங்கங்களைக் களைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இருவகை களங்கங்கள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை, அவர்கள் பற்றி சமூக அளவில் இருக்கும் களங்கம் ஆகியவை தொடர்வதாகக் கூறப்படுகிறது.
மனநலக் கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது. அதில் 300 நோயாளிகள் பங்கெடுத்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பலருக்குத் தாழ்வு மனப்பான்மை இருப்பது அந்த ஆய்வு மூலம் தெரியவந்தது.
மனநலம் பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் அதிலிருந்து மீண்டு வருவது அல்லது அவரது நிலை மோசமடைவதற்கு அவர்களது குடும்பம் நடந்துகொள்வதைப் பொறுத்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
வலுவான குடும்ப ஆதரவு கொண்டவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் மனநலப் பிரச்சினையிலிருந்து சுமுகமான முறையில் மீண்டு வருவதாக 2022ஆம் ஆண்டு தேசிய சமூக சேவை மன்றம் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்தது.
மனநலம் தொடர்பாக இருக்கும் களங்கங்களை கொள்கை வழியாகச் சிங்கப்பூர் எதிர்கொள்கிறது.
மனநோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது மெடிஷீல்டு லைஃப் பயன்படுத்தி மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
2021ஆம் ஆண்டிலிருந்து மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஷீல்டு திட்டம் மூலம் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தலாம்.