வல்லரசுகளின் போட்டிக்கு இடையே நடுத்தர நாடுகளுக்குப் புதிய தெரிவுகள்

ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026

வல்லரசுகளின் போட்டிக்கு இடையே நடுத்தர நாடுகளுக்குப் புதிய தெரிவுகள்

படம்: சுந்தர நடராஜ்

27 Nov 2026 - 7:53 pm

2 mins read

வல்லரசுகளுக்கு இடையிலான போட்டி, புவிசார் அரசியல் சவால்கள், நடுத்தர நாடுகளின் வாய்ப்புகள் போன்றவற்றை ‘ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026’ன் புவிசார் அரசியல் தொடர்பான கலந்துரையாடல் ஆராய்ந்தது.

மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற ஐந்தாவது மாநாட்டின் ஒரு பகுதியாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. ‘வல்லரசுகள் மோதுமா? நடுத்தர நாடுகள் என்ன செய்ய முடியும்?’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை லியான்ஹே சாவ்பாவ் நாளேட்டின் இணை ஆசிரியர் இங் ஹுய் மின் வழிநடத்தினார்.

‘வல்லரசுகள் மோதுமா? நடுத்தர நாடுகள் என்ன செய்ய முடியும்?’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
‘வல்லரசுகள் மோதுமா? நடுத்தர நாடுகள் என்ன செய்ய முடியும்?’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. - படம்: சுந்தர நடராஜ்

இந்தோனீசிய வெளியுறவுக் கொள்கைக் கூட்டமைப்பின் நிறுவனர் டினோ பட்டி ஜலால், கேம்பிரிட்ஜ் இஆர்ஏ அமைப்பின் மூத்த ஆய்வாளர் ஜூன் பார்க், சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாவ் மிங்ஹாவ் ஆகியோர் இதில் பேச்சாளர்களாகப் பங்கேற்றனர்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று வல்லரசுகளும் இணைந்து செயல்படும் புதிய அணுகுமுறை அவசியம் என்று குறிப்பிட்டார் பேராசிரியர் ஜாவ்.

“நம்பிக்கைக்குப் பதிலாகப் பரஸ்பர பலவீனங்களின் அடிப்படையிலேயே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ‘ஆக்கபூர்வ உத்திசார் நிலைத்தன்மை’ உருவாகி வருகிறது. சீனாவிடம் அரிய தாதுக்கள் உள்ள நிலையில், அமெரிக்காவிடம் உயர் தொழில்நுட்பச் சில்லுகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

மேலும், ‘ஏஐ’ தொழில்நுட்பம் வழியாக அறிவாற்றல் சார்ந்த போர் தொடுக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

வல்லரசுகளின் நெருக்குதல்களுக்கு இடையில் நடுத்தர நாடுகளுக்கு இன்று பல தெரிவுகள் உள்ளன என்று முனைவர் டினோ குறிப்பிட்டார். ஒரு தரப்பு நெருக்குதல் கொடுத்தால், சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பிற தெரிவுகளை நாட முடியும் என்று அவர் சுட்டினார்.

அதேநேரம், அமெரிக்காவின் அதிநவீனச் சில்லுக் கட்டுப்பாடுகளால் தென்கிழக்காசியாவின் தரவு நிலையங்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும், மலேசியாவின் 44 விழுக்காட்டு அந்நிய நேரடி முதலீடு இத்துறையைச் சார்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆசியான் மின்கட்டமைப்பு போன்ற திட்டங்களில் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்ற அவர், கொவிட்-19 பெருந்தொற்று எதிர்பாராமல் தாக்கியது போன்று, எதிர்காலத்தில் ‘ஏஐ’ துறையிலும் எதிர்பாராத பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்தார்.

தென்கிழக்காசியாவின் பகுதிமின்கடத்திச் சோதனை, பொட்டலமிடும் துறை அமெரிக்காவின் புதிய ஏற்றுமதி விதிமுறைகளால் சவால்களைச் சந்திக்கும் என்றும் மனிதக் கண்காணிப்பற்ற ராணுவ ‘ஏஐ’ இயந்திர மனிதக் கருவிகள் புதிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் முனைவர் ஜூன் பார்க் சுட்டினார்.

வல்லரசுகளுக்கு இடையிலான போட்டி, புவிசார் அரசியல் சவால்கள், நடுத்தர நாடுகளின் வாய்ப்புகள் போன்றவற்றை இந்தக் குழு கலந்துரையாடல் ஆராய்ந்தது.
வல்லரசுகளுக்கு இடையிலான போட்டி, புவிசார் அரசியல் சவால்கள், நடுத்தர நாடுகளின் வாய்ப்புகள் போன்றவற்றை இந்தக் குழு கலந்துரையாடல் ஆராய்ந்தது. - படம்: சுந்தர நடராஜ்

இந்நிகழ்ச்சிக்கு ஓசிபிசி வங்கி முதன்மை ஆதரவாளராகச் செயல்படுகிறது. அமேசான் வெப் சர்வீசஸ் அதிகாரபூர்வ ‘கிளவுட்’ பங்காளியாகவும் மரினா பே சேண்ட்ஸ் அதிகாரபூர்வ இடவசதி பங்காளியாகவும் இணைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்