கொவிட்-19 கிருமிப்பரவலின்போது தடுப்பூசிக்கு எதிரான இயக்கம் சிங்கப்பூரில் வேரூன்றியிருந்தால் மரண விகிதம் இன்னும் அதிகரித்திருக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நோய்ப்பரவலுக்குப் பலியானோர் எண்ணிக்கை குறைவாகப் பதிவான நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அதற்குப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள், குறிப்பாக மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஒரு காரணம் என்றார் திரு ஓங்.
அதையடுத்து, சிங்கப்பூரில் வெளிநாட்டினரையும் அனுமதிக்க முடிந்தது என்றார் அவர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ் நாளேட்டின் ‘த யூஷ்வல் பிளேஸ் (The Usual Place)‘ என்ற நடப்பு விவகார வலையொளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது திரு ஓங் இதனைத் தெரிவித்தார்.
கொவிட்-19 காலகட்டத்தில் அதாவது 2020ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை கிருமிப்பரவலால் மாண்டோர் விகிதம் ஒரு மில்லியனுக்கு கிட்டத்தட்ட 980 பேர் என்றார் திரு ஓங்.
அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 3,000. பிரிட்டனிலும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும் அது 2,000ஆகப் பதிவானது. அங்கெல்லாம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதில் மக்கள் மெத்தனமாக இருந்துவிட்டனர்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் திரு ஓங் குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது மக்களுக்கு எந்த அளவிற்குப் பயனளிக்கும் என்பதையும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் சொல்ல தரவுகள் இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
அவ்வகையில், சிங்கப்பூரர்கள் சிறப்பாக யோசித்துச் செயல்பட்டனர் என்ற திரு ஓங், நாட்டில் தடுப்பூசிக்கு எதிராக ஒரு சிறு கூட்டம் இருந்ததாகவும் சொன்னார்.
ஆனால், அவர்களின் எண்ணிக்கை பெருகினால் அத்தகையோரைப் பாதுகாப்பது சிரமமாகிவிடும் என்றார் திரு ஓங்.
தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாததால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்ற அமைச்சர் ஓங், உலகத்தில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் அம்மை தலைதூக்கியதைச் சுட்டிக்காட்டினார்.
தடுப்பூசிக்கு எதிரான நம்பிக்கை நம் சமுதாயத்தில் ஊடுருவினால் அம்மை போன்றவை நோய்கள் மீண்டும் பரவுவதை நம்மால் காண முடியும் என்றும் அவர் சொனனர்.

