தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமநிலை பேணுவது சிறந்தது: தைப்பூச விடுமுறை கோரிக்கைக்கு அமைச்சர் பதில்

3 mins read
இப்போதைய அணுகுமுறையே சிங்கப்பூருக்குப் பொருத்தமானது என்றார் மனிதவளத் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங்
388ebaff-48a4-4a67-9bce-8e0a8b4ff584
தைப்பூசத்தின்போது காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிய பக்தர்கள். - படம்: த.கவி

சிங்கப்பூரில் பொது விடுமுறை நாள்களின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், சமநிலையைக் கட்டிக்காத்தது நமக்கு நன்மை உண்டாக்கியதுடன், அது சிங்கப்பூருக்குப் பொருத்தமான அணுகுமுறையாகவும் அமைந்தது என்று மனிதவள துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

மார்ச் 7ஆம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், தைப்பூசத் திருநாளைப் பொது விடுமுறையாக அறிவிக்கும்படி பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் முன்வைத்த வேண்டுகோளுக்குப் பதில் அளித்தபோது திருவாட்டி கான் இவ்வாறு கூறினார்.

நோன்புப் பெருநாளுக்கும் சீனப் புத்தாண்டுக்கும் கூடுதலாக மூன்று விடுமுறை நாள்களைச் சேர்க்க சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் புவா கோரிக்கை விடுத்ததையும் அவர் சுட்டினார்.

“பொது விடுமுறைகள் தொடர்பான சிங்கப்பூரின் தற்போதைய முறையானது, சிங்கப்பூர் சுதந்திரமடைந்தபின் கவனமான கலந்துரையாடல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் பிறகு விளைந்தது.

“ஆண்டுகள் செல்லச் செல்ல, பல்லின, பல சமய, பண்பாட்டுச் சமூகமாக வாழ நாம் கற்றுக்கொண்டுள்ளோம். பொதுநலனுக்காக எல்லாரும் சில சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியுள்ளது,” என்று திருவாட்டி கான் கூறினார்.

“அவ்வகையில், எல்லாச் சமயத்துச் சிங்கப்பூரர்களும் தத்தம் சமய நிகழ்வுகளைக் கொண்டாட வகை செய்யும்படி முதலாளிகளை ஊக்குவிக்கிறோம். தற்போதைய சமநிலையைக் கட்டிக்காத்தது நமக்கு நன்மை அளித்துள்ளது. அது தொடர்ந்து, சிங்கப்பூருக்குப் பொருத்தமான அணுகுமுறையாகவும் திகழும்,” என்றார் திருவாட்டி கான்.

சிங்கப்பூரின் தற்போதைய பொது விடுமுறை நாள்கள் சமயவாரியாக ஒதுக்கப்பட்டதாகக் கருதப்பட்டால், அந்த ஒதுக்கீடு நியாயமாகச் செய்யப்படவில்லை என்று திரு லிம், தம் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அரசிதழ் அங்கீகாரம் பெற்றுள்ள விடுமுறைகள், இனங்களுடன் கூடிய தொடர்புக்காக மட்டுமன்றி, அவற்றின் சமய முக்கியத்துவத்திற்காகவும் தெரிவுசெய்யப்பட்டவை என்பது அரசாங்கம் அளித்துள்ள பதில்களிலிருந்து புலப்படுவதாக திரு லிம் குறிப்பிட்டார்.

தற்போதைய பொது விடுமுறைப் பட்டியல், ஒவ்வோர் இனக்குழுவுக்கும் இரண்டு விடுமுறைகளை ஒதுக்கீடு செய்த காலனித்துவ வழமையின் தொடர்ச்சியா என்ற கேள்வியை 2022 அக்டோபரில் நாடாளுமன்றத்தில் தாம் முன்வைத்ததாகத் திரு லிம் தெரிவித்தார். அந்தக் கேள்விக்கு மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங்கின் பதிலையும் திரு லிம் மேற்கோள் காட்டினார்.

எல்லாச் சமயப் பிரிவினரும் ஒரு விடுமுறையை விட்டுக்கொடுக்கும்படி கேட்கப்பட்டதாக (டாக்டர் டான்) விளக்கமளித்தார். கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் திங்கட்கிழமையை விட்டுக்கொடுத்தனர்; இந்துக்கள் தைப்பூசத்திற்குப் பதிலாக தீபாவளியை விடுமுறையாகத் தெரிவுசெய்தனர்.

விடுமுறை நாள்கள் அதிகரிக்கப்பட்டால் ‘லாவ் ட்சு’வின் (தாவ் சமய குரு) பிறந்தநாள், மகளிர் தினம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நாள்களை விடுமுறையாக்கும் கோரிக்கைகள் வலுக்கும் என்று டாக்டர் டான் விளக்கமளித்ததாக திரு லிம் கூறினார்.

இருந்தபோதும், அந்தப் பதிலானது இவ்விடுமுறைகள் எப்படி உருவாகின என்பதைக் கருத்தில்கொள்ளத் தவறுவதாகத் திரு லிம் குறிப்பிட்டார்.

“தொடக்கத்தில் சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், தைப்பூசம் ஆகியவை விடுமுறைகளாக இருந்தன. ஆனால், மலாய், இந்தியச் சமூகத்தினர் அப்போதைய சட்டமன்றத்திற்கு மனு அனுப்பியதைத் தொடர்ந்து, ஹஜ்ஜுப் பெருநாளும் தீபாவளியும் சேர்க்கப்பட்டன,” என்று அவர் விளக்கினார்.

“மற்ற சமூகங்களுக்கு இரண்டு விடுமுறை நாள்கள் இருப்பதுபோல, இந்தியச் சமூகத்தினருக்கும் தீபாவளியும் விசாக தினமும் இருப்பதை மேலாேட்டமாகக் காணும்போது நியாயமாகத் தோன்றலாம். இருந்தபோதும், என்னதான் சித்தார்த்த கெளதமர் இந்திய இளவரசராக இருந்து துறவியானபோதும் இங்குள்ள இந்தியச் சமூகத்தினர் விசாக தினத்தைப் பெரிய அளவில் கொண்டாடுவதில்லை,” என்று திரு லிம் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் தைப்பூசம் முன்னர் பொது விடுமுறையாக இருந்த நிலையில், அதனைப் பொது விடுமுறை நாள் பட்டியலிலிருந்து நீக்கிய ‘1968 மாற்றப்பட்ட விடுமுறை மசோதா’வை ஒட்டிய விவாதத்தைத் தம் உரையில் மேற்கோள் காட்டினார் திரு லிம்.

அப்போது சட்ட, பொருளியல் வளர்ச்சி அமைச்சராக இருந்த ஈ.டபிள்யூ. பார்க்கர், ‘நம் தீவு செழிப்படைந்தால் நம் அரசாங்கம் என்னை மீண்டும் இங்கே வரச் சொல்லும். அப்போது, பொது விடுமுறை நாள்களை அதிகரிப்பதற்கான சட்டமூல மாற்றங்களை முன்னெடுப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்’ என்று கூறியிருந்ததைத் திரு லிம் நினைவுகூர்ந்தார்

“1968ல் கிட்டத்தட்ட $2,100 ஆக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அறுபது மடங்காகி தற்போது கிட்டத்தட்ட $127,000ஆக உயர்ந்துள்ளது. நாம் வளம்பெறவில்லை என்பதைச் சாதிக்க இயலாது. எனவே, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி, தைப்பூசத்தை மீண்டும் பொது விடுமுறை ஆக்கும் காலம் வந்துவிட்டது,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, தைப்பூசத்தைப் பொது விடுமுறையாக்கும் வேண்டுகோளை மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கான் தியாம் போ 2012ல் முன்வைத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்