அரசாங்கம் வழங்கும் உதவித்தொகை, மானியங்களைக் கணக்கிடுவதில் ஏற்பட்ட தவறு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகச் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தெரிவித்துள்ளது. அதனால் ஏறக்குறைய 20,000 பேருக்குத் தவறான உதவித்தொகையும் மானியங்களும் கிடைத்தன.
அமைச்சு நிர்வகிக்கும் ‘ஹோம்ஸ்’ எனும் குடும்ப வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட தகுதிக் கணிப்பு முறையில் தவறு உண்டானது. அந்தத் தவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினருக்கு ஏறக்குறைய $7 மில்லியன் கூடுதலாகவும் எஞ்சியோருக்குச் சுமார் $2 மில்லியன் குறைவாகவும் கொடுக்கப்பட்டதாக அமைச்சு சொன்னது.
‘ஹோம்ஸ்’ முறையில் ஏற்பட்ட தவறு குறித்த தகவலை அமைச்சு திங்கட்கிழமை (ஜூலை 21) வெளியிட்டது.
அதிக உதவித்தொகை அல்லது மானியத்தைப் பெற்றோர் அதைத் திருப்பிச் செலுத்தவேண்டாம். அதே நேரத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டியதை விடவும் குறைவாகப் பெற்றவர்களுக்கு அரசாங்க அமைப்புகள் வரும் நவம்பர் மாதத்திற்குள் எஞ்சிய தொகையைத் தந்துவிடும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
குறிப்பிட்ட உதவித்தொகைத் திட்டங்களுக்காக ஒருவரின் வருமானத்தைக் கணக்கிடச் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடமிருந்து தகவல்களைப் பெறுகிறது ‘ஹோம்ஸ்’.
2025ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டுக்கு, ஆணையம் வருமான வரியைத் தெரியப்படுத்தும் நடைமுறையை ஜனவரி மாத நடுப்பகுதியில் தொடங்கியது. ஒப்புநோக்க, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த நடைமுறை ஆரம்பித்ததாக அமைச்சு கூறியது.
வருமான வரி மதிப்பீடுகளை மேலும் துல்லியமாய் மதிப்பிடுவதற்காக ஆண்டு முழுமைக்குமான மத்திய சேம நிதிப் பங்களிப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதை உறுதிசெய்வது நோக்கம்.
இருப்பினும் ‘ஹோம்ஸ்’ முறையில் ஏற்பட்ட தவற்றால் குறிப்பிட்ட சிலரின் வர்த்தக வருமானம் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இவ்வாண்டு ஜனவரி முதல் தேதிக்கும் 27ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வர்த்தக வருமானம் ஈட்டியவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்குமான தகுதிக் கணிப்பு முறையில் தவறு ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்களில் ஒருவர் ஜனவரி 13ஆம் தேதி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தபோது பிரச்சினை தெரியவந்தது என்றும் அதன் பின்னர் தவறு அடையாளம் காணப்பட்டது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

