சிங்கப்பூர் பங்குச் சந்தைக்கு புத்துயிரூட்டவும் அதன் பணப்புழக்கம் மற்றும் இயக்க ஆற்றலை அதிகரிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மேலும் ஐந்து சொத்து நிர்வாக நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் பங்குச் சந்தைக்குப் புத்துயிரளிப்பதற்காக 2025ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட $6.5 பில்லியன் மதிப்பிலான பங்குச் சந்தை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்டுள்ள மூன்றாவது பிரிவு சொத்து நிர்வாக நிறுவனங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த நிர்வாக நிறுவனங்களிடம் சிங்கப்பூர் நாணய ஆணையம் $1.45 பில்லியன் தொகையை முதலீட்டிற்காக ஒப்படைக்கும். இதன் மூலம் இத்திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை $5.4 பில்லியனாக உயர்கிறது.
அமுண்டி, ஃபிராங்க்ளின் டெம்பிள்ட்டன், ஹெச்எஸ்பிசி அசெட் மேனேஜ்மெண்ட், எம்&ஜி இன்வெஸ்ட்மெண்ட்ஸ், நாடிக்சிஸ் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களே அந்தப் புதிய சொத்து நிர்வாக நிறுவனங்கள் ஆகும்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) நடைபெற்ற ‘சூப்பர்ரிட்டர்ன் ஏஷியா’ மாநாட்டில் தேசிய வளர்ச்சி அமைச்சரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவருமான சீ ஹொங் டாட் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
முன்னதாக நியமிக்கப்பட்ட முதல் இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த ஒன்பது சொத்து நிர்வாகிகளிடம் நாணய ஆணையம் $3.95 பில்லியன் தொகையை ஒப்படைத்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் சீ, அந்த நிர்வாகிகள் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, நான்காவது பிரிவு சொத்து நிர்வாகிகளுக்கான முன்மொழிவுகளை நாணய ஆணையம் பரிசீலித்து வருவதாகவும் அதுகுறித்த அறிவிப்பு 2027ல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை நியமிக்கப்படாத உள்ளூர் மற்றும் அனைத்துலக நிதி நிர்வாகிகளுக்கும் இத்திட்டத்தில் இணைய இன்னும் வாய்ப்புள்ளதாக அமைச்சர் சீ கூறினார்.
