உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது

உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது

படம்:ஏஷியா ஒன்

29 Nov 2026 - 7:28 pm

2 mins read

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பாளர்களை கடந்த இரு வாரங்களாக அச்சுறுத்தி வந்த குரங்கு பிடிபட்டுள்ளதால், அதன் தொடர் அட்டகாசம், முடிவுக்கு வந்துள்ளது.

உட்லண்ட்ஸ் டிரைவ் 14, புளோக் 517ல் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்து பழங்களையும் தின்பண்டங்களையும் திருடிச் சென்ற நீண்ட வால் குரங்கை தேசியப் பூங்காக் கழகம் (என்பிபி) பிடித்துள்ளதாக லியான்ஹே சாவ்பாவ் சீன நாளிதழ் சனிக்கிழமை (நவம்பர் 28) செய்தி வெளியிட்டது.

அப்பேட்டையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் 47 வயது ஹுவாங் வென்சாவ், கடந்த சில வாரங்களாகவே அக்குரங்கு வீடுகளில் புகுந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் அதற்கு முன்பு அங்குக் குரங்குப் பிரச்சினை இருந்ததில்லை என்றும் கூறினார்.

மூன்றாவது மாடியில் வசிக்கும் அவரது வீட்டுச் சன்னலுக்கு வெளியே ஐந்து முதல் ஆறு மாடி அளவிலான உயர மரம் உள்ளது. அதனைப் பயன்படுத்தி அந்தக் குரங்கு அதன் குறும்புகளையும் சேட்டைகளையும் இரு வாரங்களாகத் தொடரந்தது.

இரவில் காற்றோட்டத்திற்காகத் தாம் சன்னலைச் சிறிது திறந்து வைத்திருந்ததாகவும், ஆனால் குரங்கு சன்னலைத் திறந்து உள்ளே புகுந்து ரொட்டி, பழங்களைத் திருடியதால் சன்னல்களை எப்போதும் மூடியே வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.

காற்றோட்டம் இல்லாததால் தமது குடும்பத்தினர் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாயினர் என்றார் அவர். பள்ளி விடுமுறை நாள்களில் வீட்டிலிருக்கும் தமது 12, 10 வயது மகள்கள் கழிப்பறைக்குச் செல்லும்போதும் பாதுகாப்புக்காகத் துணைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

குரங்குகள் கிருமிகளைப் பரப்பக்கூடும் என்பதாலும் பிள்ளைகளைக் கீறிவிடுமோ என்ற அச்சத்தாலும் கவலையடைந்ததாகத் திரு ஹுவாங் கூறினார்.

சன்னல்களை மூடி வைப்பதால் வெப்பமும் ஈரப்பதமும் அதிகரித்துத் தமது வீட்டில் செய்யும் சுய தொழுல் பாதிக்கப்பட்டதாக 27 வயது அபி எனும் குடியிருப்பாளர் தெரிவித்தார். அவரது வீட்டுக்குள் பலமுறை புகுந்த அக்குரங்கு, பழங்களைத் திருடியதோடு முட்டைகளை உடைத்துத் தரையில் எறும்புகள் மொய்க்கச் செய்ததால், அதனைச் சுத்தம் செய்ய அவருக்கு ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஆனது.

வெள்ளிக்கிழமை, இரு விலங்கு நல மருத்துவச் சேவை (ஏவிஎஸ்) அதிகாரிகளை தேசிய பூங்காக் கழகம் குரங்கைப் பிடிக்க பணியமர்த்தியும் அது அவர்களை ஏமாற்றி, மரத்தின் மிக உயரமான பகுதிக்குத் தப்பிச் சென்றது. கழகம் எவ்வாறு குரங்கைப் பிடித்தது என்பதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்