சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ‘ஸ்கூட்’ இரண்டும் வருடாந்திர ‘டைம் டு பிளை’ பயணச்சந்தையின் மூலம் 380,000க்கும் அதிகமான பயணச்சீட்டுகளைக் கழிவு விலையில் விற்க உள்ளன.
இதில் எஸ்ஐஏ நிறுவனத்தின் 200,000க்கும் அதிகமான இருவழிப் பயணச்சீட்டுகளும், ஸ்கூட் நிறுவனத்தின் 180,000க்கும் அதிகமான ஒருவழிப் பயணச்சீட்டுகளும் அடங்கும்.
அக்டோபர் 23 முதல் அக்டோபர் 30 வரை இணையம், செயலிகள், அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் கழிவுவிலையில் பயணச்சீட்டுகளை வாங்கலாம்.
பேங்காக், லண்டன், லாஸ் ஏஞ்சலஸ், சிட்னி, சோல் போன்ற நகரங்களுக்கும், ஸ்கூட்டின் புதிய சேவைகளான சியாங் ராய், ஒகினாவா போன்ற இடங்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.
எஸ்ஐஏ பயணச்சீட்டுகளுக்கான பயணக்காலம் 2027 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரை உள்ளது. இது 78 இடங்களுக்கான பிசினஸ், பிரிமியம் எக்கனாமி, எக்கனாமி வகுப்புகளுக்குப் பொருந்தும். ஸ்கூட் பயணச்சீட்டுகள் 70 இடங்களுக்கு, 2026 நவம்பர் 9 முதல் 2027 அக்டோபர் 15 வரையிலான பயணக்காலத்திற்குச் செல்லுபடியாகும்.
அக்டோபர் 23 முதல் 25 வரை சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி மையத்தின் 401, 402, 403 மண்டபங்களில் நேரடிப் பயணச்சந்தையும் நடைபெறும். இதில் 30க்கும் மேற்பட்ட பயண முகவர்களும் பங்காளிகளும் கலந்துகொண்டு சிறப்புச் சலுகைகளை வழங்க உள்ளனர்.
