குறைந்தது $1 மில்லியன் லாபத்துக்கு மறுவிற்பனை செய்யப்பட்ட எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் அதிகரித்தது.
இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 15ஆக இருந்தது. இது 2024ஆம் ஆண்டில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்தது.
2024ஆம் ஆண்டில் குறைந்தது $1 மில்லியன் லாபத்துக்கு 38 எக்சகியூட்டிவ் வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்டன. இந்தத் தகவலை புரோப்பர்டி லிம் பிரதர்ஸ் ஆய்வு தரவுகள் காட்டுகின்றன.
2022ஆம் ஆண்டில் ஆறு எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் மட்டுமே குறைந்தது $1 மில்லியன் லாபத்துக்கு மறுவிற்பனை செய்யப்பட்டதை புரோப்பர்ட்டி லிம் பிரதர்ஸ் சொத்து நிறுவனம் சுட்டியது.
இந்நிலையில், இவ்வாண்டு ஜனவரி 24ஆம் தேதி நிலவரப்படி 85 எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் குறைந்தது $1 மில்லியன் லாபத்துக்கு மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டில் மறுவிற்பனை செய்யப்பட்ட எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளில் ஆக அதிகத் தொகைக்கு பீஷான் லோஃப்ட் குடியிருப்பில் உள்ள நான்கு படுக்கையறை கொண்ட ஒன்று விற்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதியன்று அது, முன் இல்லாத அளவில் ஆக அதிகமாக $2.16 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டது.
2001ஆம் ஆண்டில் அந்த வீடு $549,277க்கு வாங்கப்பட்டது. அந்த வீடு $1.61 மில்லியன் லாபத்துக்கு (293%) மறுவிற்பனை செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பீஷான் லோஃப்ட் குடியிருப்பில் மேலும் மூன்று வீடுகள் 274 விழுக்காட்டுக்கும் 286 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட லாபத்துக்கு மறுவிற்பனை செய்யப்பட்டன. இந்த நான்கு வீடுகளும் 2001ஆம் ஆண்டில் சொத்து மேம்பாட்டாளரிடமிருந்து புதிய வீடுகளாக வாங்கப்பட்டன.
எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளின் விலை பேரளவில் அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் இருப்பதாகச் சொத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிலங்களின் விலை அதிகரித்திருப்பதால் புதிதாகக் கட்டப்படும் எக்சகியூட்டிவ் வீடுகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
எனவே, புதிய எக்சகியூட்டிவ் வீடுகளுடன் ஒப்பிடுகையில், மறுவிற்பனை எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் மலிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக வீடு வாங்க முற்படும் பலரது கவனம் மறுவிற்பனை எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளின் பக்கம் திரும்பியுள்ளது.
இதனால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது.
எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் அமைந்துள்ள இடமும் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஆரஞ்சுடீ குழுமத்தின் தலைமை ஆய்வாளரும் உத்திகள் பிரிவுத் தலைவருமான கிறிஸ்டின் திருவாட்டி சுன் கூறினார்.
உதாரணத்துக்கு, பீஷான் லோஃப்ட், பீஷான் எம்ஆர்டி நிலையம் மற்றும் பிரபல பள்ளிக்கூடங்களுக்கு மிக அருகில் இருப்பதை அவர் சுட்டினார்.

