தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2030களில் பிறப்புகளைக் காட்டிலும் அதிகமான இறப்புகள் இருக்கக்கூடும்: பிரதமர் அலுவலகம்

2 mins read
குடிமக்கள் பிறப்பு இறப்பு தொடர்பில் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா
04529c18-e3d4-4ae9-b4ee-9a83ac846b26
பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இன்னும் ஏறக்குறைய பத்து ஆண்டுகளில், சிங்கப்பூரர்களிடையே குழந்தைப் பிறப்புகளைக் காட்டிலும் அதிகமான இறப்புகள் நிகழக்கூடும்.

அவ்வாறு நடந்தால், குடியேறிகள் இல்லாமல் சிங்கப்பூரின் மக்கள்தொகை குறைந்துவிடும்.

இதனால், ஊழியரணியின் அளவு, பொருளியல் செயலாற்றல், பராமரிப்பாளர் சுமை, சமூகக் கட்டமைப்பு தொடர்பான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மக்கள்தொகை விவகாரங்களை ஆராயும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா செப்டம்பர் 9ஆம் தேதி நாடாளுமன்றக் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வ பதில் அளித்தார்.

“தற்போதைய போக்குகளின் அடிப்படையில், 2030களின் முதல் பாதியில் குடிமக்களின் இறப்பு எண்ணிக்கை, குடிமக்களின் பிறப்பு எண்ணிக்கையை மிஞ்சிவிடக்கூடும்,” என்றார் அவர்.

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸல் புவா, கடந்த பத்தாண்டில் குடிமக்களின் இறப்பு எண்ணிக்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு குமாரி இந்திராணி பதில் அளித்தார்.

சென்ற ஆண்டு 24,726 குடிமக்கள் இறப்புகள் ஏற்பட்டன. 2014ஆம் ஆண்டில் பதிவான 17,691 இறப்புகளைக் காட்டிலும் அது 40 விழுக்காடு அதிகம்.

ஒப்புநோக்க, அதே காலகட்டத்தில் குடிமக்கள் பிறப்பு விகிதம் குறைந்தது. 2023ஆம் ஆண்டில், அத்தகைய 28,877 பிறப்புகள் பதிவானதாக பிரதமர் அலுவலகப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். 2014ஆம் ஆண்டில் பதிவான 33,193ஐ காட்டிலும், அது 13 விழுக்காடு குறைவு.

குடிமக்கள் பிறப்பு என்பது குறைந்தது ஒரு சிங்கப்பூரரான பெற்றோரைக் கொண்டிருக்கும் கைக்குழந்தையைக் குறிக்கிறது. அத்தகைய கைக்குழந்தைகள் பிறக்கும்போதே சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுவிடுவர் என்றார் அந்தப் பேச்சாளர்.

“ஒரு நாட்டின் பிறப்பு விகிதம் நீண்டகாலமாக குறைவாகவே இருந்தால், அதன் மக்கள்தொகை மேலும் மூப்படையும்; இயல்பாகவே இறப்புகளின் எண்ணிக்கை பிறப்புகளின் எண்ணிக்கையை விஞ்சிவிடும்,” என்று அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பில் சமூக அறிவியல் பிரிவின் இயக்குநராக இருக்கும் பேராசிரியர் ஜீன் யுங் கூறினார்.

சிங்கப்பூரின் குடியிருப்பாளர் குழந்தைப் பிறப்பு விகிதம் கடந்த 30 ஆண்டுகளாக இறங்கிக்கொண்டு இருக்கிறது.

சிங்கப்பூர் வரலாற்றிலேயே, முதல் முறையாக சென்ற ஆண்டு அது ஒன்றுக்குக் குறைவாக, 0.97ஆகப் பதிவானது.

கடந்த இருபது ஆண்டுகளாக, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, சிங்கப்பூர் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. புதிதாகப் பிறக்கும் கைக்குழந்தைகளுக்கு குழந்தை போனஸ் ரொக்கம், அதிகமான மகப்பேற்று, தந்தையர் விடுப்பு உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

இதற்கிடையில், சிங்கப்பூரின் மக்கள்தொகை விரைவில் மூப்படைந்து வருகிறது. 2010ஆம் ஆண்டில், பத்து சிங்கப்பூரர்களில் ஒருவர் 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவராக இருந்தார். 2030க்குள், அது நால்வரில் ஒருவராக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் அலுவலகத்தின் முன்னுரைப்புகள் வியக்கத்தக்கதல்ல என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். சீனா, ஜப்பான், இத்தாலி போன்ற குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்ட நாடுகள் ஏற்கெனவே பிறப்புகளைக் காட்டிலும் அதிகமான இறப்புகளை எதிர்நோக்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்