சாங்கி கிரீக் வட்டாரத்தில் உள்ள விமானப் பராமரிப்பு வளாகம், 500க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவிருக்கிறது.
கிட்டத்தட்ட $170 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட அந்தப் பழுதுபார்ப்பு, சீரமைப்பு வசதியில் செயல்பாடுகளை மேம்படுத்த ஆளில்லா வானூர்தி, இயந்திர மனிதக் கருவி, முப்பரிமாண அச்சு ஆகிய அதிநவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும்.
சிங்கப்பூரில் உள்ள எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் நான்காவது விமானப் பராமரிப்பு வளாகம், 84,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
அது முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது சிங்கப்பூரில் உள்ள விமானப் பராமரிப்புக் கட்டமைப்பின் செயல்திறனைக் கிட்டத்தட்ட 40 விழுக்காடு பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, சிங்கப்பூரில் ஆண்டுக்குக் கூடுதலாக 100 விமானங்கள் பராமரிக்கப்படக்கூடும்.
பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்குச் செயற்கை நுண்ணறிவு, இயந்திர மனிதக் கருவிகள் போன்றவை மேலும் வலுசேர்க்கும் என்றார் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான திரு கான் கிம் யோங்.
சிங்கப்பூர் நிறுவனங்களின் செயல்திறனையும் விமானத் துறையில் உள்ள ஊழியரணியையும் வலுப்படுத்துவதில் எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனம் நீண்டகாலமாக முக்கியப் பங்கு வகித்து வந்ததாகத் திரு கான் குறிப்பிட்டார்.
“இந்தப் புதிய வசதி, உரிமம் பெற்ற விமான பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், திட்டமிடல், உற்பத்தி கட்டுப்பாட்டு நிபுணர்கள் உட்பட எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனத்தின் விமானப் பராமரிப்புக் கட்டமைப்புப் பிரிவில் 500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும்,” என்றார் அவர்.
உள்நாட்டு பயிற்சி, உயர்கல்வி நிறுவனங்களுடனான பங்காளித்துவம் போன்றவை மூலம் ஊழியர்கள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள எஸ்டி எஞ்சினியரிங் உதவி வருகிறது என்றும் குறிப்பிட்ட திரு கான், கடந்த மூவாண்டுகளில் 250க்கும் மேற்பட்ட புதிய உள்ளூர் ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளதைச் சுட்டினார்.
