வெஸ்ட் கோஸ்ட், ஜூரோங் பகுதிகளில் வசிப்போர் தொழில் வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டுக்குமான ஆதரவை எளிதில் பெற உதவும் நிகழ்ச்சி, வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகத்தின் (e2i) ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
‘பணிகளை உங்களிடம் கொண்டுவருதல்’ (Bringing Jobs to Your Doorstep) என்ற நிகழ்ச்சி ஏப்ரல் 20ஆம் தேதி பூன் லே சமூக மன்றத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 350 பேர் கலந்துகொண்டனர்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி வேட்பாளர் ஹமீது ரசாக்கும் கலந்துகொண்டார்.
அடித்தள மற்றும் சமூகப் பங்காளிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி 3,500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களைக் குடியிருப்பாளர்களுக்கு வழங்கியது.
குறிப்பாக இளையர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இந்த வாய்ப்புகள் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள், தொழில் ஆலோசனை சேவைகள் போன்றவையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
கடந்த ஐந்தாண்டுகளில் ‘இ2ஐ’ வெஸ்ட் கோஸ்ட், ஜூரோங், பைனியர் பகுதிகளில் கிட்டதட்ட 55 வேலை மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
“இந்த நிகழ்ச்சிகள் மூலம் கிடைத்த வேலை ஆலோசனை, திறன் மேம்பாட்டு ஆலோசனைகளால் குடியிருப்பாளர்கள் ஏறத்தாழ 10,000 பேர் பயனடைந்துள்ளனர்,” என்று சுட்டிக்காட்டினார் திரு லீ.
தொடர்புடைய செய்திகள்
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், ‘ஃபைண்ட் ஜாப்ஸ்’ பிரைவேட் லிமிடட் (FindJobs Pte Ltd) போன்ற சமூகப் பங்காளித்துவ அமைப்புகளும் ‘இ2ஐ’யும் திரு லீயின் முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் தொழில் வல்லுநர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், குடியிருப்பாளர்களுக்கு அதிக பணிசார்ந்த ஆதரவு வழங்க இந்த ஒப்பந்தம் உதவும்.
தகவல் தொழில்நுட்பப் பராமரிப்புத் துறையில் பணிபுரியும் செபஸ்டியன் ஜோன் பிரிட்டோ, 59, தன் திறன்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று ஆலோசனை பெற நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
“வயது அதிகரிக்கும் நிலையில் வேலையிடத்தில் புத்தாக்கமும் அதிகரிப்பதால் குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகள் என் துறையில் நீடிக்க என்னை மேம்படுத்துவது அவசியம்,” என்றார் அவர்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் குடியிருப்பு வட்டாரத்தில் இடம்பெறுவதால் சமூக அளவில் தன்னைப் போன்ற மேற்கு வட்டாரவாசிகள் அதிகமானோர் பயனடைவர் என்றும் அவர் தெரிவித்தார்.
எங்கள் கவனம் நமது மக்கள் மீது மட்டும்: அமைச்சர் டெஸ்மண்ட் லீ
மக்களுக்கு உறுதியளித்து அதன்படி செயல்படுவது அவசியம் என்று தெரிவித்தார் அமைச்சர் டெஸ்மண்ட் லீ.
‘இ2ஐ’ ஏற்பாடு செய்த ‘பணிகளை உங்களிடம் கொண்டுவருதல்’ சமூக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, வெஸ்ட் கோஸ்ட் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதாக 2020ஆம் ஆண்டு உறுதிகூறியதை நினைவுகூர்ந்தார்.
“மக்களுக்கான எங்கள் வாக்குறுதியில் எப்போதும் கவனம் செலுத்துகிறோம்,” என்றார் அமைச்சர்.
வரும் தேர்தலை முன்னிட்டு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடப்போவது குறித்துச் செய்தியாளர்கள் திரு லீயிடம் கேட்டபோது, “தேர்தல் என்றாலே சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் முடிவெடுக்கும் வாய்ப்புள்ளது,” என்றார்.
“தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள் மக்கள் நலனுக்காக எதைக் கொண்டுவருகின்றன என்பது முக்கியம்,” என்றார் அவர்.
கட்சியில் பல்வேறு திறன்கள் கொண்ட புதுமுக வேட்பாளர்கள் இருப்பதாகப் பாராட்டினார் திரு ஹமீது ரசாக்.
“அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எங்கள் சமூகத்தில் நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை முன்வைப்போம். மக்கள் எடுக்கும் முடிவு எதுவாயினும் அதை மதிப்போம்,” என்றார் அவர்.

