சிங்கப்பூர் ஆர்வலர் ஜலவன் வாம்மீது புதிய குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூர் ஆர்வலர் ஜலவன் வாம்மீது புதிய குற்றச்சாட்டுகள்

2 mins read
a1ae1bf7-c9dd-4c91-9ebe-f56482de843a
அரசு நீதிமன்றங்களின் வளாகத்தில் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை 46 வயது ஆர்வலர் ஜலவன் வாம் எதிர்நோக்குகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் ஜலவன் வாம் என்ற ஆர்வலர்மீது திங்கட்கிழமை (செப்டம்பர் 7) ஐந்து புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அரசு நீதிமன்றங்களின் வளாகத்தில் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தது, சாங்கி சிறைச்சாலைக்கு அருகே நடைபெற்ற அஞ்சலிக் கூட்டங்களில் பங்கேற்றது, அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுத்தது ஆகியவை அவர்மீது சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

46 வயது சிங்கப்பூரரான வாம் சிங்கப்பூரில் மரண தண்டனையை ஒழிக்கும்படி கடந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அரசு நீதிமன்றங்கள் வளாகத்தில் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. அது தடைசெய்யபட்ட பகுதி.

மேலும், 2024ஆம் ஆண்டு நவம்பர் 22, 29ஆம் தேதிகளிலும் கடந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதியன்றும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகளுக்காகச் சாங்கி சிறைச்சாலைக்கு அருகில் நடைபெற்ற பல்வேறு அஞ்சலி கூட்டங்களில் வாம் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முதல் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது தொடர்பில்ஆறு நாள்களுக்குப்பின் 2024ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி பிடோக் காவல்துறைப் பிரிவில் விசாரிக்கப்பட்டபோது அதிகாரியின் எந்தவொரு கேள்விக்கும் வாம் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சிறைக் கைதிகளின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து நடைபெற்ற அஞ்சலிக் கூட்டங்களில் பங்கேற்றதற்காகப் பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் அவருக்கு ஏற்கெனவே $10,500 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

வாமின் வழக்கு தொடர்பிலான விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் செப்டம்பர் மாதத்தின் பிற்பாதியில் இடம்பெறும்.

தடைசெய்யப்பட்ட பகுதியில் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை, $10,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

விசாரணை செய்யும் அதிகாரம் உள்ள அரசாங்க ஊழியருக்குப் பதிலளிக்க மறுத்ததற்காக ஆறு மாதங்கள் வரையிலான சிறை, $5,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்