கண் பார்வையை மிரட்டும் கிட்டப்பார்வை, கண்ணழுத்த நோய் போன்ற நோய்களுக்கான சிகிச்சைகளை மேம்படுத்த சிங்கப்பூர் கண் ஆய்வுக் கழகமும் ஜப்பானின் சன்டென் ஃபார்மசியூட்டிக்கலும் $21 மில்லியன் பெறுமானமுள்ள கூட்டு ஆய்வில் ஈடுபட இருக்கின்றன.
சன்டென்-சிங்கப்பூர் கண் ஆய்வுக் கழகப் பொது புத்தாக்க நிலையம் 2.0 எனும் மூன்று ஆண்டுகள் திட்டம் டிசம்பர் 2025ஆம் ஆண்டிலிருந்து 2028ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நடத்தப்படும்.
இந்தக் கூட்டு ஆய்வில் சன்டென் ஃபார்மசியூட்டிக்கலின் நிபுணத்துவமும் சிங்கப்பூர் கண் ஆய்வுக் கழகத்தின் மருத்துவ ஆற்றலும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டு ஆய்வில் முக்கிய ஆய்வுத் திட்டங்கள் உள்ளன.
கண்ணழுத்த நோய்க்கான சிகிச்சையை மேம்படுத்துவது, வடுக்களைத் தடுக்கும் மருந்துகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
கண் நோய் காரணமாகவும் பலமுறை சிகிச்சை செய்துகொண்டதாலும் ஏற்படும் அளவுக்கு அதிகமான திசு வடுக்களால் கண் பார்வையை இழக்கும் அபாயம் ஏற்படக்கூடும்.
கிட்டப்பார்வைக்கான சிகிச்சையை மேம்படுத்துவதிலும் இரு அமைப்புகளும் இணைந்து செயல்படும். இதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டு ஆய்வுக்கு சிங்கப்பூரின் ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைவு 2025 திட்டம் ஆதரவு வழங்குகிறது.
சிங்கப்பூரின் ஆய்வு, மேம்பாட்டுத் துறையை மேம்படுத்துவதே இதன் இலக்கு.
தொடர்புடைய செய்திகள்
கண்ணழுத்த நோய், கிட்டப்பார்வை ஆகியவற்றுக்கான இரண்டு புதிய சிகிச்சையை மருத்துவ நிலைக்குக் கொண்டு செல்வதே இந்த மூவாண்டுத் திட்டத்தின் நோக்கம்.
அதன்படி, மருந்தின் பாதுகாப்பு, மருந்தால் மனிதர்களுக்கு ஏற்படும் பலன்கள் ஆகியவற்றைக் கண்டறிய சோதனைத் திட்டம் நடத்தப்படும்.

