துவாஸ் துறைமுகத்தில் உள்ள புதிய பாரந்தூக்கும் கருவி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சாய்ந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
அந்தப் பாரந்தூக்கி செயல்பாட்டில் இல்லாத பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையமும் பிஎஸ்ஏ துறைமுக நிர்வாக நிறுவனமும் இணைந்து ஜூன் 15ஆம் தேதி கூட்டறிக்கை வெளியிட்டன.
அதில் துறைமுகக் கருவிகளுக்கும் சுற்றியுள்ள இடத்துக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று அறிக்கை குறிப்பிட்டது.
பிஎஸ்ஏ நிறுவனத்தில் செயல்பட்டு வரும் அனைத்து துறைமுகப் பகுதிகளுக்கு வழக்கம்போல செல்ல முடிவதாக அறிக்கை சொன்னது.
துறைமுகச் செயல்பாடுகளும் மேம்பாட்டுப் பணிகளும் பாதிக்கப்படவில்லை.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.