தொழில்நுட்பம், பசுமைப் பொருளியல், தொழில்துறை ஆகியவற்றில் புதிய வளர்ச்சிப் பகுதிகள்

தொழில்நுட்பம், பசுமைப் பொருளியல், தொழில்துறை ஆகியவற்றில் புதிய வளர்ச்சிப் பகுதிகள்

2 mins read
சிங்கப்பூர், இந்தோனீசியா நாடுகள் கடப்பாடு
b7a575e7-507f-4952-9892-28289d732220
சிங்கப்பூர் துணைப் பிரதமரும், வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் (வலது), இந்தோனேசியாவின் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஏர்லாங்கா ஹார்டார்டோ. - படம்: வர்த்தக தொழில் அமைச்சு

சிங்கப்பூரும் இந்தோனீசியாவும், பாத்தாம், பிந்தான், கரிமுன் வட்டாரத்தில் உள்ள தொழில்நுட்பத் துறையில் எதிர்கால வாய்ப்புகளைக் கண்டறிய ஒரு கூட்டு ஆய்வை நடத்தவுள்ளன.

அதேவேளையில், இரு நாடுகளும் பல தரவு மைய முதலீடுகளை உள்ளடக்கிய, அப்பகுதியை ஒரு ‘துடிப்பான மின்னிலக்க மையமாக’ மாற்றுவதற்கான திட்டங்களை ஏற்கெனவே முன்னெடுத்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 9), ஜகார்த்தாவில் நடைபெற்ற 16வது சிங்கப்பூர்-இந்தோனீசியா ஆறு இருதரப்பு பொருளியல் பணிக்குழுக்களின் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் இந்த முன்னேற்றங்கள் விவாதிக்கப்பட்டன.

இக்கூட்டத்திற்கு சிங்கப்பூரின் துணைப் பிரதமரும், வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் மற்றும் இந்தோனீசியாவின் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஏர்லாங்கா ஹர்டார்டோ ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.

முதலீடுகள், மனிதவளம், போக்குவரத்து, சுற்றுலா, வேளாண் வர்த்தகம், மற்றும் பாத்தாம், பிந்தான், கரிமுன் வட்டாரம், பிற சிறப்புப் பொருளியல் மண்டலங்களின் மேம்பாடு ஆகிய ஆறு துறைகளில் இரு அண்டை நாடுகளும் பொருளியல் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான ஒரு தளமாக இந்த வருடாந்தரக் கூட்டம் விளங்குகிறது.

இந்தக் கூட்டத்தில், அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் பொருளியல் உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், மின்னிலக்கப் பொருளியல், பசுமை ஆற்றல், தொழில்துறை உள்கட்டமைப்பு, வேளாண் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் திரு கானும் திரு ஏர்லாங்காவும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

“சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் பல்லாண்டுகாலப் பங்காளித்துவத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நீண்டகால பொருளியல் உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன,” என்று வர்த்தக, தொழில் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் கான் கூறினார்.

“மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியல், தொழில்துறை உள்கட்டமைப்பு, வேளாண் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்,” என்றார் அவர்.

ஜகார்த்தாவில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏர்லாங்கா, இரு நாடுகளும் பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் ஒத்துழைப்பை உறுதியான முதலீடுகள் மற்றும் திட்டங்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

“நமது இருதரப்பு பொருளியல் ஒத்துழைப்பு வலுவாக இருப்பதும், மிக முக்கியமாக, சரியான திசையில் செல்வதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று ஏர்லாங்கா கூறினார்.

சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் பகிர்ந்துகொள்ளும் நீண்ட மற்றும் வலுவான இருதரப்பு உறவின் பிரதிபலிப்பே இந்த வருடாந்தர அமைச்சர்கள் கூட்டம் என்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு திரு கான் செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பொருளியல்பாத்தாம்ஒத்துழைப்பு