தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அக்டோபர் 1 முதல் புதிய ஹலால் சான்றிதழ்

2 mins read
60afb4fa-a7f1-4165-af34-fe3684a03b9e
அக்டோபர் 1 முதல், உணவுக் கடைகள் பயன்படுத்தவுள்ள புதிய ஹலால் சான்றிதழ். - படம்: சாவ்பாவ்

அக்டோபர் 1 முதல், கியூஆர் குறியீட்டைக் கொண்ட ஒரு புதிய ஹலால் சான்றிதழ் உணவுக் கடைகளில் காட்சிப்படுத்தப்படும். அக்குறியீட்டை வருடி, அச்சான்றிதழின் செல்லுபடியாகும் தன்மையைச் சரிபார்க்கலாம்.

இந்த மாற்றத்தின் மூலம், வணிகங்கள் தங்கள் சான்றிதழைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு முறையும் கடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சான்றிதழை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

கியூஆர் குறியீடு, நிறுவனத்தின் சான்றிதழ் விவரங்கள் மற்றும் அது செல்லுபடியாகும் நிலை பற்றிய இணையப் பக்கத்திற்கு இட்டுச்செல்லும். அத்துடன், சான்றிதழ் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக பயனீட்டாளர்கள் கருதினால், அதுபற்றிப் புகாரளிக்க ஓர் இணைப்பும் அதில் இருக்கும்.

தற்போது, ஒரு கடையின் ஹலால் சான்றிதழ் குறித்து சந்தேகம் இருந்தால், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்திற்கு (முயிஸ்) பயனீட்டாளர்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

கோழி இறைச்சிக் கூடங்கள் மற்றும் மத்திய சமையற்கூடங்கள் போன்று ஹலால் சான்றிதழ் வைத்திருக்கும் இதர நிறுவனங்களுக்கும் அக்டோபர் முதல் முழுமையான மின்னிலக்கச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஹலால் சான்றிதழைக் காட்சிப்படுத்தும் உணவுக் கடைகள் மார்ச் 2026க்குள் புதிய சான்றிதழுக்கு மாற வேண்டும்.

ஹில்டன் சிங்கப்பூரில் புதன்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற சிங்கப்பூர் ஹலால் அனைத்துலகக் கருத்தரங்கில் புதிய ஹலால் சான்றிதழை முயிஸ் அறிவித்தது.

ஹலால் சான்றிதழ் வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்படுவதை எளிதாக்க ஒரு புதிய இணையவாசலையும் அது அறிவித்தது.

தற்போது, இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் ஹலால் சான்றிதழ் தரநிலைகள் சிங்கப்பூருடன் ஒத்துப்போகிறதா என்பதைச் சரிபார்க்க முயிசுக்கு மின்னஞ்சல் மூலம் தங்கள் ஆவணங்களை அனுப்ப வேண்டும். இந்தச் செயல்முறைக்கு சில மாதங்கள் ஆகும்.

அக்டோபர் 1 முதல் செயல்படத் தொடங்கும் இந்த இணையவாசல், விண்ணப்பங்களுக்கு ஆகும் நேரத்தைக் குறைக்கும். இதை https://fhcb.muis.gov.sg என்ற இணையப்பக்கத்தில் அணுகலாம்.

இதுநாள்வரை, ஹலால் சான்றிதழ் வழங்கும் 101 வெளிநாட்டு நிறுவனங்கள் முயிசால் அங்கீகரிக்கப்படுகின்றன. வேறு நாடுகளிலிருந்து ஹலால் உணவை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்ய விரும்பும் வணிகங்களுக்காக இந்தப் பட்டியல் இணையவாசலில் கிடைக்கும்.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம், “சிங்கப்பூரின் ஹலால் உணவுச் சான்றிதழ் தரநிலைகள் பல்லாண்டு காலமாக நம்பிக்கையின் அடையாளமாக இருந்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று கருத்தரங்கில் கூறினார்.

சிங்கப்பூர் மக்கள்தொகையில் முஸ்லிம் சமூகம் ஏறக்குறைய 15 விழுக்காடு பங்கு வகிக்கிறது. குறைவான நிலம், வளங்களுடன் சிங்கப்பூர் ஒரு சிறிய நாடாக இருப்பதால், இங்குள்ள முஸ்லிம் சமூகத்துக்கு நிலையான ஹலால் உணவு இறக்குமதிகள் தேவைப்படுவதாக இணைப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.

குறிப்புச் சொற்கள்