புதிய விதிமுறைகளின்படி ஒருங்கிணைந்த காப்புறுதி ரைடர் (ஐபி ரைடர்) திட்டங்களின் சந்தாதாரர்கள் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து தாங்கள் பெறும் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.
அதனையடுத்து விண்ணப்பதாரர்களை ஈர்க்கக் காப்புறுதி நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் புதிய திட்டங்களில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன.
எடுத்துக்காட்டாக, புருடென்ஷியல் சிங்கப்பூர் வழங்கும் ரைடர் திட்டத்தின் சந்தாதாரர் வேலையில் ஆட்குறைப்பு செய்யப்பட்டிருந்தாலோ ஆறு மாதங்களுக்கு வேலை இல்லாமல் இருந்தாலோ 12 மாதங்களுக்கு சந்தா தொகை செலுத்தத் தேவையில்லை. அதிக காலத்துக்கு நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இந்நடவடிக்கை என புருடென்ஷியல் தெரிவித்தது.
அதேபோல், ரைடர் திட்ட சந்தாதாரர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ புற்றுநோய், பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தாலோ அந்த ஆண்டுத் திட்டத்திலிருந்து பெறக்கூடிய தொகையை புருடென்ஷியல் 100,000 வெள்ளி வரை அதிகரிக்கும்.
கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், நான்கு புதிய ரைடர் திட்டங்களை வழங்குகிறது. ஒவ்வொரு திட்டமும் வெவ்வேறு வகை மருத்துவமனைகளுக்குப் பொருந்தும்.
கிரேட் ஈஸ்டர்ன் வழங்கும் புதிய ஐபி ரைடர் திட்டங்களின் அனுகூலங்களிலும் கட்டுப்பாடுகளிலும் மாற்றம் இல்லை. ஆனால், திட்டம் எவ்வளவு தூரம் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து வரையப்பட்ட கட்டண முறையை கிரேட் ஈஸ்டன் அகற்றியுள்ளது. அந்தக் கட்டண முறையின்கீழ் குறிப்பிடப்பட்ட காலத்தில் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளாத சந்தாதாரர்களுக்கு 20 விழுக்காடு விலைக் கழிவு வழங்கப்பட்டது. அதேநேரம், திட்டங்களிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் உதவித்தொகையைப் (claim) பெற்றுக்கொண்டோருக்கான சந்தா தொகை அதிகரிக்கப்பட்டது.
அந்தக் கட்டண முறையினால் சந்தாதாரர்களுக்கு அதிக சுமை ஏற்படலாம் என்பதாலும் தேவைப்படும்போதுகூட சந்தாதாரர்கள் மருத்துவ உதவி நாடாமல் இருக்கக்கூடும் என்பதாலும் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக கிரேட் ஈஸ்டர்ன் விளக்கமளித்தது.
இன்கம் இன்ஷுரன்ஸ் காப்புறுதி நிறுவனம், புதிய கூடுதல் பலன்களை அளிக்கும் இரண்டு புதிய ரைடர் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் சிடிஜிடிபி பட்டியலின்கீழ் வழங்கப்படும் உயிரணு, மரபணு உள்ளிட்டவற்றின் தொடர்பான சிகிச்சைகளையும் அவை உள்ளடக்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
எச்எஸ்பிசி லைஃப், ஏஐஏ சிங்கப்பூர், ராஃபிள்ஸ் ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆகியவையும் மாறுபட்ட ரைடர் திட்டங்களை வழங்குகின்றன.
புதிய ரைடர் திட்டங்களுக்கான சந்தா கட்டணங்கள் பழையனவற்றுக்கான கட்டணங்களைவிட 16லிருந்து 84 விழுக்காடு குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, தங்களின் மூன்று புதிய ரைடர் திட்டங்களுக்கான சந்தா தொகை எல்லா வயதுப் பிரிவினரிடையேயும் குறைந்தது 30 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று புருடென்ஷியல், சிங்லைஃப் ஆகியவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன. சில பிரிவுகளில் தொகை 84 விழுக்காடுகூட குறைவாக இருக்கலாம் என்றும் சிங்லைஃப் குறிப்பிட்டது.

