எம்ஆர்டி, எல்ஆர்டி ரயில்களில் பயணம் செய்வோருக்கு உதவிட ஒருங்கிணைந்த நிகழ்நேர இணையப்பக்கம் சனிக்கிழமை (டிசம்பர் 13) தொடங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இயங்கும் அனைத்து ரயில் சேவைகளைப் பற்றியும் முழுமையான விவரங்களை நேரடியாக வழங்கும் அந்த mytransport.sg/trainstatus என்ற இணையப்பக்கம் சனிக்கிழமை மாலை 6மணிமுதல் செயல்படும்.
ரயில் சேவைகளில் தடைகள் ஏற்படும்போது அல்லது எவ்வித சம்பவம் நடந்தாலும் அந்த இணையப்பக்கம் நேரடியாக நிகழ்நேர அறிவிப்புகளையும் விவரங்களையும் வழங்கும்.
சேவைத் தடைகள் பொதுவாக இருவிதமாக வகைப்படுத்தப்படும். அவற்றில் 30 நிமிடங்களில் மீண்டும் தொடங்கக்கூடிய சிறிய தடைகளுக்கு மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்படும். ஆரஞ்சு நிறம் பெரிய அளவிலான, 30 நிமிடங்களுக்கும் மேற்பட்ட சேவைத் தடைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
நிலப்போக்குவரத்து ஆணையம், கூகிள் வரைபடங்கள் அமைப்புடன் இணைந்து நிகழ்நேரத்தில் சேவைத் தடை ஏற்பட்டுள்ள குறிப்பிட்ட பயணப் பாதைகள் வாரியாக விவரங்களை வழங்க செயல்முறைகளை மேம்படுத்தி வருகிறது. அதன்வழியாக பயண நேரக் கணிப்புகள் மேம்படும் என்பது நம்பிக்கை.
எம்ஆர்டி, எஸ்எம்ஆர்டி ஆகிய இருநிறுவனங்கள் நிர்வகிக்கும் ரயில் சேவைகளில் ஏற்படும் சேவைத் தடை உள்ளிட்ட பல விவரங்களையும் அந்த இணையப்பக்கம் ஒருங்கிணைத்து வழங்கும்.
தடைகள் சீர்செய்யப்படும்போது படிப்படியாக வண்ணங்கள் மாற்றம் செய்யப்படும். ஆரஞ்சு வண்ணம் மஞ்சளுக்கு மாற்றப்பட்டு பச்சை நிறம் வெளிப்பட்டால் சேவை மீண்டும் தொடங்கிவிட்டது என்று பொருள்படும். அதேவேளை, மஞ்சள் நிறம் மீண்டும் ஆரஞ்சுக்கு மாறினால் தடையை சீரமைக்க அதிக நேரம் தேவை என்று அர்த்தப்படும்.
திட்டமிட்டு மேம்பாட்டுப் பணிகளுக்காகச் செய்யப்படும் சேவைத் தடைகளுக்கு மாறுபட்ட குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் விளக்கியது.
தொடர்புடைய செய்திகள்
சமூக ஊடகங்களில் 30 நிமிடங்களுக்குக் குறைவான சேவைத் தடைகள் பற்றிய விவரங்களை வெளியிடுவதைத் தவிர்த்து பாதிப்படைந்த நிலையங்களில் பயணிகளிடம் நேரடியாக தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்போவதாக எம்ஆர்டி மற்றும் எல்ஆர்டி நிறுவனங்கள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிப்பு செய்திருந்தன.
அதற்குப் பிறகு நிலப் போக்குவரத்தின் இந்த நிகழ்நேர இணையப்பக்கம் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

