மே 28ஆம் தேதியிலிருந்து தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் புதிய கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நோவாவேக்ஸ்/நுவாசோவிட் எக்ஸ்பிபி.1.5 என்று அழைக்கப்படும் இப்புதிய தடுப்பூசியைக் குறிப்பிட்ட சில தனியார் மருந்தகங்களில் இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம் என்று அமைச்சு கூறியது.
இந்தத் தடுப்பூசி சுகாதார அறிவியல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
12 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோர் புதிய நோவாவேக்ஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று தடுப்பூசி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள முடியாதோர் புரதச் சத்தால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
‘மயோகார்டைட்டிஸ்’ எனப்படும் இதயத் தசை அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்போர் புதிய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு எம்ஆர்என்ஏ தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, ‘பெரிகார்டைட்டிஸ்’ எனப்படும் இதயத்தைச் சுற்றியுள்ள மெல்லிய திசுக்களில் வீக்கம் அல்லது எரிச்சலால் பாதிக்கப்பட்டோரும் புதிய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நோவாவேக்ஸ் தடுப்பூசியை வழங்கும் தனியார் மருந்தகங்கள் பட்டியலை https://www.gowhere.gov.sg/vaccine/ எனும் இணையப்பக்கத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
சுகாதார முன்பதிவு இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்துவிட்டு அல்லது தனியார் மருந்தகங்களுடன் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துவிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செல்லுமாறு பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்குகிறது.
ஆகக் கடைசியாக கூடுதல் தடுப்பூசியைப் போட்டு கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியுள்ள நிலையில், எளிதில் நோய்வாய்ப்படக்கூடியவர்கள் 2024ஆம் ஆண்டில் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகின்றனர்.
60 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோர், நோய்களால் எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள், மூத்தோர் பராமரிப்பு நிலையங்களில் தங்கும் முதியோர் ஆகியோர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.