2028 முதல் புதைபடிவ எரிவாயுவிற்கு மாற்றாக உயிர்மீத்தேனைப் பயன்படுத்தும் புதிய முன்னோடித் திட்டம்

2028 முதல் புதைபடிவ எரிவாயுவிற்கு மாற்றாக உயிர்மீத்தேனைப் பயன்படுத்தும் புதிய முன்னோடித் திட்டம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Oct 2026 - 12:39 pm

2 mins read

2028ஆம் ஆண்டுக்குள், சிங்கப்பூர் தனது மின்விளக்குகளுக்கான மின்சாரத்தைத் தொடர்ந்து வழங்குவதற்கு, பாரம்பரியமாகப் பயன்படுத்தும் புதைபடிவ எரிவாயுவைவிடக் குறைந்த கரிமம் கொண்டதாகக் கருதப்படும் உயிர்மீத்தேனைப் பயன்படுத்தத் தொடங்கக்கூடும்.

ஒரு முன்னோட்டத் திட்டத்தின்கீழ் உயிர்மீத்தேனை இறக்குமதி செய்து வழங்குவதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக ‘கெப்பல் எனர்ஜி’, ‘செம்ப்கார்ப் யூட்டிலிட்டிஸ்’, ‘துவாஸ் பவர் ஜெனரேஷன்’ ஆகிய மூன்று மின் உற்பத்தி நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) அறிவித்தார்.

சிங்கப்பூரின் 95 விழுக்காட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தற்போது பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயு, புதைபடிவ எரிபொருள்களிலிருந்து வருகிறது. ஆனால், அதற்கு ஈடான உயிர்மீத்தேன், உணவுக் கழிவுகள், விவசாயக் கழிவுகள், விலங்குகளின் சாணம், கழிவுநீர்ச் சேறு போன்ற கரிமப் பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனால்தான் உயிர்மீத்தேன் சில நேரங்களில் ‘புதுப்பிக்கத்தக்க எரிபொருள்’ என்று கருதப்படுகிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், அதிகச் செலவு பிடிக்கும் மாற்றங்கள் இன்றி, தற்போதுள்ள இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பிற்குள்ளேயே இதைப் பயன்படுத்த முடியும்.

சிங்கப்பூர் தொழில்துறை கரியமிலக் குறைப்பு மன்றத்தின் தொடக்க விழாவில் திரு கான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியைப் பொருளியல் வளர்ச்சிக் கழகம், ஏஸ்டார், மேம்பட்ட எரிசக்தி மற்றும் கரியமிலக் குறைப்பு அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தியது.

சிங்கப்பூரின் கரிமக் குறைப்பு இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி, மேம்பாடு, செயல்விளக்கத்தை ஒருங்கிணைத்து ஆதரிப்பதற்கான தேசியத் தளமாக இந்த அலுவலகம் விளங்குகிறது.

இந்த நிகழ்ச்சியின்போது, ​​சிங்கப்பூர் தனது கரிமத் தடத்தைக் குறைக்க உதவும் தொடர் முயற்சிகள் அறிவிக்கப்பட்டன. உயிர்மீத்தேன் இறக்குமதி முன்னோட்டத் திட்டத்தைத் தவிர, தொழில்துறைக் கரிமக் குறைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான $143 மில்லியன் நிதித் திட்டம் உள்ளிட்ட பிற அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

2050ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பமயமாதலுக்குக் காரணமான, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்துக்கும் கரிம நீக்கத்துக்கும் இடையிலான சமநிலையைப் (net-zero) பேணச் சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.

இந்த இலக்கை அடைவது கரிம வெளியேற்றம் அதிகமுள்ள துறைகளான, மின்சாரம், தொழில்துறைகள் உட்பட, அவற்றின் கரிமத் தடம் குறைக்கப்படுவதை உள்ளடக்கும். புதிய முயற்சிகள் மின்சாரம், தொழில்துறைகளில் இருந்து கரிம வெளியேற்றத்தைக் குறைக்க உதவும்.

“நமது தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மின்சாரத்தால் ஏற்படும் கரிம வெளியேற்றம் உட்பட, நமது மொத்தக் கரிம வெளியேற்றத்தில் ஏறத்தாழ 65 விழுக்காடு, இந்தத் தொழிற்சாலைகளாலேயே ஏற்படுகின்றன,” என்று திரு கான் கூறினார்.

“இந்தக் கரிம வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்காமல், 2050க்குள் நம்மால் ‘நெட்-ஸீரோ’ நிலையை அடைய முடியாது,” என்றார் அவர்.

மேலும், சிங்கப்பூர் இந்தத் தொழிற்சாலைகளின் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் அதே வேளையில், அவற்றைப் போட்டித்தன்மை கொண்டவையாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
வெப்பமயமாதல்இயற்கை எரிவாயுமின்சாரம்