மின்சிகரெட்டுகளுக்கு எதிரான புதிய இணையக் குறுந்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
மின்சிகரெட்டைப் பயன்படுத்துவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தேசிய தினப் பேரணி உரையில் கூறியதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் இணையத்தளத்தில் (gov.sg) புதிய குறுந்தளம் அறிமுகம் கண்டுள்ளது.
குறுந்தளம், ‘ஸ்டாப் வேப்பிங்’ (Stop Vaping) என்று வழங்கப்படுகிறது. அது திங்கட்கிழமையிலிருந்து (ஆகஸ்ட் 18) செயல்படுகிறது.
மின்சிகரெட்டைப் புகைத்தல் பொதுச் சுகாதாரத்துக்கு மிரட்டலாய் விளங்குவதாகக் குறுந்தளம் குறிப்பிட்டது. மின்சிகரெட்டைப் புகைப்பதால் ஏற்படக்கூடிய தீமைகள், உதவித் தொலைபேசி எண்கள், அவற்றைப் பற்றித் தெரிவிக்க விரும்புவோருக்கான வழிகள் முதலியவை குறுந்தளத்தில் இடம்பெற்றுள்ளன.
மின்சிகரெட்டுகளின் பயன்பாட்டை அரசாங்கம் அறவே ஏற்காது என்பதைப் புதிய இணையக் குறுந்தளம் தெளிவுபடுத்துகிறது. பயன்படுத்துவோருக்குப் பழக்கத்தை உடனே நிறுத்துமாறும் மின்சிகரெட் சாதனங்களைக் குப்பைத்தொட்டிகளில் வீசுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘ஸ்டாப் வேப்பிங்’ பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின்சிகரெட்டுகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் படங்களைச் சமூக வட்டாரங்களிலும் காணமுடிந்தது. குடியிருப்புப் பேட்டைகளின் வெற்றுத்தளங்களிலும் மின்தூக்கிகளுக்கு அருகிலும் அவற்றைப் பார்க்கலாம். மின்சிகரெட்டுகளை வீசுவோருக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அவை அமைகின்றன.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங், அண்மை வாரங்களில் மின்சிகரெட்டுகளுக்கு எதிராக இணையத்தில் குரல்கொடுப்போருக்கு நன்றி தெரிவித்தார். அதன் தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) காணொளியொன்றைப் பதிவேற்றம் செய்தார்.
“இளம் சிங்கப்பூரர்களைக் காக்க நீங்கள் கதைகளையும் உண்மைத் தகவல்களையும் பயன்படுத்துகிறீர்கள். இது இயக்கமன்று. மாறாக, ஒரு சமூகம் ஒன்றாக நின்று மின்சிகரெட்டுகளுக்கு எதிராய் எடுக்கும் முயற்சி. காரணம், மின்சிகரெட்டுகளும் எட்டோமிடேட்டும் எவ்வாறு இளையர்களைப் பாதிக்கின்றன, கேடு விளைவிக்கின்றன என்பதை நாம் நேரடியாகப் பார்த்திருக்கிறோம்,” என்றார் திரு ஓங்.
தொடர்புடைய செய்திகள்
மின்சிகரெட்டுகளுக்கு எதிராக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் தயாரித்த காணொளியும் குறுந்தளத்தில் இடம்பெற்றுள்ளது.
மின்சிகரெட் தொடர்பான குற்றங்கள் பற்றிப் புகையிலைக் கட்டுப்பாட்டுக் கிளையிடம் பொதுமக்கள் புகாரளிக்கலாம். தொலைபேசி எண்கள்: 6684-2036 அல்லது 6684-2037 காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை).
மின்சிகரெட் குற்றங்கள் பற்றித் தெரிவிக்க இணையத்தையும் நாடலாம். இணைய முகவரி: www.go.gov.sg/reportvape