அச்சு நூல், மின்னூல் இரண்டுக்குமான புதிய வாசிப்பு முனைகள் திறப்பு

அச்சு நூல், மின்னூல் இரண்டுக்குமான புதிய வாசிப்பு முனைகள் திறப்பு

சிட்டி ஸ்குவேர் மால் கடைத்தொகுதியில் தேசிய நூலக வாரியத்தின் புதிய முயற்சி
படம்: தேசிய நூலக வாரியம்

19 Oct 2026 - 8:52 pm

2 mins read

மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள சிட்டி ஸ்குவேர் மால் கடைத்தொகுதியில் அச்சிடப்பட்ட புத்தகங்களையும் மின்னூல்களையும் வாசிப்பதற்கான புதிய வாசிப்பு முனை திங்கட்கிழமை (அக்டோபர் 19) திறக்கப்பட்டுள்ளது.

தேசிய நூலக வாரியம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ரக்கூட்டன் கோபோ நிறுவனத்துடன் இணைந்து ‘சிட்-என்-ரீட் நோட்’ (Sit-n-Read Node) எனும் சிறப்பு வாசிப்பு முனையை அமைத்துள்ளதாகக் கூறியது. 2027 ஏப்ரல் 11ஆம் தேதி வரை இயங்கும் இந்த வாசிப்பு முனை, கடைத்தொகுதியின் மூன்றாவது தளத்தில் அன்றாடம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

இங்குள்ள சிறப்பு இருக்கைப் பகுதிகளில் அமர்ந்து, கோபோ மின்வாசிப்பான்கள் மூலம் மின்னூல்களின் சுருக்கங்களை வாசிக்கலாம். முழுப் புத்தகத்தையும் படிக்க விரும்புவோர், தேசிய நூலக வாரியத்தின் கைப்பேசிச் செயலி மூலம் பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.

மேலும், இங்குள்ள அச்சிடப்பட்ட புத்தகங்களை இரவல் வாங்காமலே வீட்டிற்கு இலவசமாக எடுத்துச் செல்லலாம். இருப்பினும், அந்தப் புத்தகங்களை மீண்டும் கொண்டுவந்து தந்தால் மற்றவர்களும் அவற்றை வாசிக்க ஏதுவாயிருக்கும் என்று நூலக வாரியம் கேட்டுக்கொள்கிறது.

‘ரீட்எஸ்ஜி’ இயக்கத்தின்கீழ், வாசிப்பை சிங்கப்பூரில் உள்ளோரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று வாரியத்தின் தலைமை நிர்வாகி மெலிசா டாம் தெரிவித்தார்.

திங்கட்கிழமை, அலெக்ஸாண்ட்ரா ரோட்டில் உள்ள ஆங்கர்பாயின்ட் கடைத்தொகுதியிலும் ஒரு ‘சிட்-என்-ரீட் நோட்’ வாசிப்பு முனை திறக்கப்பட்டது. 2025 ஆகஸ்ட் முதல் தொடங்கப்பட்ட இத்தகைய வாசிப்பு முனைகள் இதுவரை 400,000 பார்வையாளர்களை ஈர்த்துள்ளன.

குறிப்புச் சொற்கள்