ஓசிபிசி வங்கிச் செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம்

2 mins read
127c8626-e806-4ef3-93c5-0ee0287fc973
புதிய வசதி மூலம், மோசடிக்காரர்கள் மேற்கொள்ளும் அழைப்பையும் வங்கியிலிருந்து வரும் அழைப்பையும் வாடிக்கையாளர்களால் வேறுபடுத்திக் காணமுடியும் என்று ஓசிபிசி தெரிவித்துள்ளது. - படம்: ஓசிபிசி

ஓசிபிசி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் பொருட்டு தனது கைப்பேசிச் செயலியில் அவசர அழைப்புக்கான சிறப்பு அம்சம் ஒன்றை இணைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தனது வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்த அந்த வசதியை தற்போது கட்டம் கட்டமாக எல்லா வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தி வருவதாக அந்த வங்கி திங்கட்கிழமை (நவம்பர் 24) தெரிவித்தது.

மோசடிகள் நிகழ்ந்து வரும் காலகட்டத்தில், அவற்றில் இருந்து தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கவும் தற்போது அளித்து வரும் வசதிகளை மேம்படுத்தவும் சிறப்புத் தொலைபேசி அழைப்புக்கான பொத்தானை தனது செயலியில் சேர்த்திருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

தமது வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனை நிகழ்ந்திருப்பதாகச் சந்தேகிக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அந்தத் தொலைபேசி பொத்தானை அழுத்தி வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

சிங்கப்பூரில் இருந்து மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும் அந்தத் தொலைபேசி வசதியைப் பயன்படுத்தலாம். வெளிநாட்டு அழைப்புக்கான கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் ஓசிபிசி வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து, தனது வர்த்தக வாடிக்கையாளர்கள் மற்றும் சாதாரண வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் 8,000க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாக வங்கி கூறியது.

வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளும்போது அவர்களிடம் பாதுகாப்புச் சோதனை தொடர்பாகக் கேட்கப்படும் கேள்விகள், குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் ஒருமுறைக்கான மறைச்சொல் ஆகியவற்றைச் சார்ந்திருப்பது இந்தப் புதிய வசதி மூலம் குறையும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

“தொழில்நுட்பங்கள் மேம்பாடு கண்டு வருவதால் அவற்றைப் பயன்படுத்தித் தந்திரமாக மோசடிகள் புரிவதும் அதிகரிக்கின்றன.

“குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் ஒருமுறைக்கான மறைச்சொல்லை மோசடிக்காரர்கள் எளிதில் ஊடுருவ முடிகிறது. புதிய தொலைபேசிச் சேவை மோசடிக்காரர்கள் எளிதில் ஊடுருவாத வகையில் பாதுகாப்பைத் தரும். மோசடிக்காரர்கள் மேற்கொள்ளும் அழைப்பையும் வங்கியிலிருந்து வரும் அழைப்பையும் வாடிக்கையாளர்களால் வேறுபடுத்திப் பார்க்கமுடியும்,” என்றது ஓசிபிசி.

குறிப்புச் சொற்கள்