பதின்ம வயதினருக்கான ‘சாட்ஜிபிடி’யில் புதிய பாதுகாப்பு அம்சங்கள்

பதின்ம வயதினருக்கான ‘சாட்ஜிபிடி’யில் புதிய பாதுகாப்பு அம்சங்கள்

2 mins read
a0657064-c407-4c77-bcae-39e41c96caa7
செயற்கை நுண்ணறிவு சாட்போட் தவறான வழிகாட்டுதலை வழங்கி, பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், புதிய பாதுகாப்பு அம்சங்கள் வெளியிடப்படுகின்றன. - கோப்புப் படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

இளையர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு இடையே, பதின்ம வயதினருக்கான பிரத்தியேக ‘சாட்ஜிபிடி’ சேவையை ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனம் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) அறிமுகப்படுத்துகிறது.

பதினெட்டு வயதுக்குட்பட்ட பதிவுசெய்த பயனர்களுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் தானாகவே செயல்படத் தொடங்கும் என்று ஓப்பன்ஏஐ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வலைப்பதிவில் தெரிவித்தது.

தனக்குத் தானே காயம் விளைவிப்பது, வன்முறை, உணவுண்ணும் பழக்கத்தில் முறையின்மை, அபாயகரமான நடவடிக்கைகள், ஆபாச உள்ளடக்கங்கள் உள்ளிட்டவை சிறுவர்களுக்குக் காண்பிக்கப்படுவது இதில் குறைக்கப்படும். சாட்ஜிபிடி கணக்கு தொடங்கும்போது பயனர்கள் தங்கள் வயதை அறிவிக்க வேண்டும். பயன்பாட்டு முறைகளைக் கொண்டு வயதைக் கணிக்கும் நுட்பமும் இதில் உள்ளது.

தனிப்பட்ட படங்களைப் பதிவேற்றுவதைத் தடுக்கும் எச்சரிக்கைகளும் பாதுகாப்பைக் கூட்டும் வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும்.

சாட்போட் (chatbot), பாலியல் சார்ந்த உரையாடல்களில் ஈடுபடுவதையும் உணர்வுபூர்வமாகச் சார்ந்திருப்பதை ஊக்குவிப்பதையும் தனக்கு உணர்வுகள் இருப்பதாகக் காட்டுவதையும் பாதுகாப்பு அம்சங்கள் தடுக்கின்றன.

பெற்றோர் தங்கள் கணக்குகளைப் பிள்ளைகளின் கணக்குகளோடு இணைத்துக்கொள்ள முடியும். உணவுண்ணும் பழக்கத்தில் முறையின்மை போன்ற ஆபத்தான சூழல்களில் பெற்றோருக்கு எச்சரிக்கைகள் அனுப்பப்படும். எனினும், பாதுகாப்பு குறித்த ஆபத்துகள் தவிர, மற்ற நேரங்களில் பெற்றோரால் உரையாடல்களைக் கவனிக்க முடியாது.

ஆபத்தான சவால்கள், ஆபாச உள்ளடக்கங்களைப் பார்ப்பதைத் தடுக்கவும் பயன்பாட்டு நேரத்தை நிர்ணயிக்கவும் பெற்றோருக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கற்றலை எளிதாக்க, படிப்படியாக வழிகாட்டும் ‘ஸ்டடி மோட்’ (Study Mode) என்ற புதிய அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு சாட்போட் தவறான வழிகாட்டுதலை வழங்கி, பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உயிரை மாய்த்துக்கொள்ள சாட்ஜிபிடி தூண்டியதாகக் கூறி, 16 வயதுச் சிறுவனின் பெற்றோர் ‘ஓப்பன்ஏஐ’ மீது 2025ல் வழக்கு தொடுத்தனர்.

மெட்டாவின் இன்ஸ்டகிராமிலும் பதின்ம வயதினருக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டகிராம், எக்ஸ் தளங்களிலும் ஏஐ சேவைகள் வழங்கப்படுகின்றன.

இத்தகைய சாட்போட்களால் ஏற்படும் இணைய ஆபத்துகளைத் தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

செயலிகளைப் பதிவிறக்குவதைக் கட்டுப்படுத்த, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களுக்கு வயது வரம்புத் தடை விதிப்பதற்குப் பதிலாக, ஆபத்தான அம்சங்களைச் சீரமைக்க நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தச் சேவைகள் பயனர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்ய உதவுகின்றன.

குறிப்புச் சொற்கள்