வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஆதரவை மேம்படுத்தும் மனிதவள அமைச்சின் புதிய முன்னெடுப்புகளை கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) அறிவித்தார்.
செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் நடைபெற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கான இன நல்லிணக்க நாள் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர், அமைச்சின் மூன்று புதிய முன்னெடுப்புகளை விவரித்தார்.
முதலாவதாக, உள்ளூர், வெளிநாட்டுச் சமூகங்களுக்கிடையிலான கலாசார பரிமாற்றங்களை மேம்படுத்த, மனிதவள அமைச்சு ‘எச்ஐஏ’ அமைப்புக்கு ஆதரவு வழங்கும்.
இத்திட்டத்தின்கீழ், கலாசாரச் சுற்றுப்பயணங்கள், சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள், பண்டிகைக் கொண்டாட்டங்கள் போன்ற மாதாந்தர நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அடுத்த ஈராண்டுகளில் 4,000 வெளிநாட்டு ஊழியர்களையும் 1,000 உள்ளூர் பங்கேற்பாளர்களையும் இத்திட்டம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவதாக 1,500 வெளிநாட்டு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. இதில், கணினிப் பயன்பாடு, ஆட்டோசிஏடி (AutoCAD), ஆங்கில மொழி, நிதியறிவு போன்ற செய்முறைப் பாடங்கள் இடம்பெறும்.
“தங்கள் மொழித் திறனை மேம்படுத்த விரும்பும் ஊழியர்களுக்கும் சிங்கப்பூரில் அல்லது தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிய பின்னர் பயன்படக்கூடிய புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கும் இந்தப் பயிற்சிகள் பயனளிக்கும்,” என்று திரு தினேஷ் கூறினார்.
மூன்றாவதாக, வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு வழங்கப்படும் ஆதரவும் விரிவாக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த ஈராண்டுகளில், மேம்படுத்தப்பட்ட ‘கேர் சிஸ்டர்ஸ்’ திட்டத்தின்வழி 1,500 பணிப்பெண்களுக்கு உளவியல், முதலுதவி உள்ளிட்ட மனநல ஆதரவு முறைகளில் பயிற்சி வழங்கப்படும்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கான இன நல்லிணக்க நாள் கொண்டாட்டம், இவ்வாண்டு எஸ்ஜி60 இன, சமய நல்லிணக்க மாதத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றது.
பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து, சிங்கப்பூரின் பன்முகக் கலாசார அடையாளத்தைக் கொண்டாடுவதை நோக்கமாக கொண்ட இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய ஆடை அலங்கார நடை, பாங்கரா நடனம், சீனப் பாரம்பரிய மேடை நிகழ்ச்சி உள்ளிட்ட கலாசார அங்கங்கள் இடம்பெற்றன.
சமயங்களுக்கு இடையிலான நம்பிக்கை தொடர்பான கலந்துரையாடலில் சிங்கப்பூர் இளையர்களும் வெளிநாட்டு ஊழியர்களும் பங்கேற்றனர்.
மனிதவள அமைச்சின் உத்தரவாதம், பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழுவும் (ஏஸ்), ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ (எச்ஐஏ) அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.
பல்வேறு கலாசாரங்களுக்கு இடையிலான ஒற்றுமையான, பகிரப்பட்ட அனுபவங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை திரு தினேஷ் வலியுறுத்தினார்.
“உள்ளூர், வெளிநாட்டுச் சமூகத்தினர் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்வதற்கும் அனுபவங்களையும் வாழ்க்கைக் கதைகளையும் பகிர்ந்துகொள்வதற்கும் நீடித்த நட்புகளை வளர்ப்பதற்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறோம்,” என்று திரு தினேஷ் கூறினார்.
நிகழ்ச்சியைத் திட்டமிடுவதிலும் வழிநடத்தியதிலும் ‘ஹெச்ஐஏ’ அமைப்பின் ‘சோவிங் கேர் டுகெதர்’ திட்டத்தைச் சேர்ந்த இளம் தலைவர்கள் முக்கியப் பங்காற்றினர்.
சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணி, சிண்டா இளையர் மன்றம் உள்ளிட்ட சமூக இணைப்புப் குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் தன்னார்வலர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
“சிங்கப்பூரில் இன நல்லிணக்க தினம் பெரியளவில் கொண்டாடப்படுகின்ற போதிலும், அந்த நல்லிணக்கத்தின் ஒரு பகுதியாக வெளிநாட்டு ஊழியர்கள் சில நேரங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள்,” என்றார் இளம் தொடூழியர்களில் ஒருவரான நாதிரா ஃபதீன் சபீல், 21.
அத்தகைய மனப்போக்குகளை சரிசெய்யும் பணியில் தங்கள் அமைப்பு ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். ‘சொவிங் கேர் டுகெதர்’ இளம் தலைவர்கள் மன்றத்தில் தொண்டூழிய மேலாளராக நாதிரா பணிபுரிகிறார்.
சமயங்களுக்கு இடையிலான நம்பிக்கை தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்ற இளையர்களும் வெளிநாட்டு ஊழியர்களும் தங்கள் சமயம், பண்பாட்டு தொடர்பான அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதாக அவர் சொன்னார்.
“இம்முறை, மரணம், திருமணம், பிறப்பு போன்ற அர்த்தமுள்ள தலைப்புகளில் கலந்துரையாடினோம்,” என்று அவர் கூறினார்.
‘டிடிஜெ டிசைன் அண்ட் இன்ஜினியரிங்’ நிறுவனத்தில் பாதுகாப்பு மேற்பார்வையாளராக பணிபுரியும் 46 வயதான பழனிவேல் சரவணன், 2004ல் சிங்கப்பூருக்கு வந்தார். தனது தங்கும் விடுதி நண்பர்களுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாக அவர் சொன்னார்.
“வெவ்வேறு கலாசாரங்களையும், அவற்றின் பாரம்பரிய ஆடைகள், இனிப்புகள், நடனங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொண்டோம். இந்திய இசையையும் உணவுகளையும் மற்றவர்கள் ரசிப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் தனது வாழ்க்கை குறித்து கூறுகையில், “குடும்பத்தைவிட்டு விலகி இருப்பது ஒரு பெரிய சவால்தான். ஆனால் அதைத் தவிர, சிங்கப்பூரில் ஒருபோதும் தனித்து இருந்ததாக நான் உணர்ந்ததில்லை,” என்றார் அவர்.
நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை இந்தியாவிலிருக்கும் தனது குடும்பத்தினருக்கு அனுப்பிய திரு பழனிவேல், “நான் மகிழ்ச்சியோடு, நல்ல உணவைச் சாப்பிட்டு, நன்றாக இருப்பதைப் பார்த்து என் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர்,” என்று புன்னகைத்தபடி கூறினார்.

