பெரிய வீட்டுக்கு மாற விரும்புவோர், சிறிய, புதிய தரை வீடுகளை நாடுகின்றனர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளிலும் கூட்டுரிமை வீடுகளிலும் வசிப்போரில் பலர், குடியிருப்பைப் பொறுத்தவரை அடுத்த நிலைக்குப் போக நினைக்கும்போது அவ்வாறு தரை வீடுகளை நாடுவதாகத் தெரியவந்துள்ளது. சந்தையில் விற்பனைக்கு வரும் தரை வீடுகளின் எண்ணிக்கை 25 ஆண்டாகத் தொடர்ந்து நிலையாக உள்ளது.
ஆனால் அதே காலத்தில், அடுக்குமாடி வீடுகள், கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.
2000ஆம் ஆண்டில் 67,229ஆக இருந்த தரை வீடுகளின் எண்ணிக்கை, 12 விழுக்காடு கூடுதலாகி 2025ல் 75,338 ஆனது.
அதே காலத்தில் தனியார் அடுக்குமாடி வீடுகள், கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை I228 விழுக்காடு உயர்ந்தது. 25 ஆண்டுக்கு முன்பு 114,532ஆக இருந்த அது, இப்போது 375,612க்குக் கூடியுள்ளது.
தரை வீடுகளைப் பொறுத்தவரை, அண்மைத் திட்டங்களில் அதிகமானவற்றின் பரப்பளவு 1,600 முதல் 3,000 சதுர அடி வரை உள்ளது. அவற்றைக் கச்சிதமான தரை வீடுகள் என்று சொத்து முகவர்கள் வருணிக்கின்றனர்.
சிறிய தரை வீடுகளின் மீதான ஆர்வத்துக்குத் தேக்கமடைந்த எண்ணிக்கையைத் தவிர்த்து வேறு காரணங்களையும் முன்வைத்தனர் சொத்து நிபுணர்கள். மாறிவரும் தேவைகள், உயரும் நிலப்பகுதியின் விலைகள், கட்டுமானச் செலவுகள், கடுமையான சட்டதிட்டங்கள் முதலியவை அவற்றுள் சில.
2020க்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் கூட்டுரிமை வீடுகளின் விலை அதிகரித்ததால் சிறிய தரை வீடுகளுக்கான தேவை கூடியதாகக் கூறியது சந்தை நிலவரத்தை மதிப்பிடும் ஈஆர்ஏ நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு.
தொடர்புடைய செய்திகள்
இளம் குடும்பத்தாரிடையே சுமார் 1,600 முதல் 3,000 சதுர அடி வரையிலான தரை வீடுகள் பிரபலமாக உள்ளன. வீட்டின் அளவும் ஒட்டுமொத்த விலையும் சமாளிக்கக்கூடிய வகையில் இருப்பதே அதற்கு முக்கியக் காரணம். அத்தகைய சிறிய தரை வீடுகளின் எண்ணிக்கை 2020ல் 17ஆக இருந்தது. 2024ல் அது 74க்குக் கூடியது. இவ்வாண்டின் முதல் 11 மாதத்தில் 30 வீடுகள் விற்கப்பட்டுள்ளன.
அண்மை ஆண்டுகளில் அறிமுகம் கண்ட சிறிய தரை வீடுகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
மெங் சுவான் ரோட்டில் உருவாகும் 999 ஆண்டுத் தவணைக்காலத்துக்கான ஸ்பிரிங்லீஃப் கலெக்ஷன் திட்டத்தில் ஐந்தறையும் ஆறறையும் கொண்ட 10 வீடுகள் உள்ளன. திட்டம் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வந்தது. அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றே மாதத்தில் 80 விழுக்காட்டு வீடுகள் விற்கப்பட்டதாக ஈஆர்ஏ நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. வீட்டு விலை $5 மில்லியனுக்கும் அதிகம்.
பார்க்வுட் கலெக்ஷன், பெல்கிரேவியா ஏஸ் போன்ற திட்டங்களின் வீடுகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில் தனியார் சொத்து முதலீட்டு நிறுவனமான ஆரம் கிராவிஸ், நேச்சுரா கலெக்ஷன் வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. அதில் மொத்தம் 10 தரை வீடுகள் உள்ளன. அவற்றின் பரப்பளவு 2,200 முதல் 2,500 சதுர அடி வரை இருக்கும். வீட்டு விலை $7 மில்லியன் வெள்ளிக்கும் அதிகம் என்று கூறப்பட்டது.

