வேலையிடத்தில் குற்றம் சார்ந்த விழிப்புணர்வுக்கு புதிய ‘வாவ்’ திட்டம்

3 mins read
aaf10a2d-6fa5-4e5f-afc4-31a88fc5caf6
தலைசிறந்த ‘சேஃபர்எஸ்ஜி’ தொண்டூழியர் விருதை உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவின் தளபதி டான் சி சோங்கிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பவே‌ஷ் ஹரே‌ஷ் தரானி. - படம்: பெரித்தா ஹரியான்

ஊழியர்களிடையே குற்றத்தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் ‘வொர்க்பிளேஸ் ஆன் வாச்’ (வாவ்/WoW) எனும் புதிய திட்டத்தை சிங்கப்பூர்க் காவல்துறை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) தொடங்கிவைத்தது.

அனைத்துலகத் தொண்டூழியர் தினத்தன்று மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் காவல்துறை நடத்திய முதல் ‘சேஃபர்எஸ்ஜி’ விருதுவிழாவில் அத்திட்டம் அறிமுகம் கண்டது.

உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் கோ பெய் மிங் அத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள், காவல்துறை அறிக்கைகளைப் பெற்று தம் ஊழியர்களுக்கும் பங்காளிகளுக்கும் பரப்பும்.

குற்றத்தடுப்பு, மோசடிகள், சாலைப் பாதுகாப்பு, அவசரகால ஆயத்தநிலை என நான்கு அங்கங்களில் காவல்துறைப் பயிலரங்குகளை நடத்துவதற்கான தளங்களையும் அந்நிறுவனங்கள் வழங்கலாம்; தம் வளாகங்களில் பாதுகாப்புத் திட்டங்களையும் செயல்படுத்தலாம்.

விருதுவிழாவில் மொத்தம் 177 தலைசிறந்த ‘சேஃபர்எஸ்ஜி’ தொண்டூழியர் விருதுகள், 40 தலைசிறந்த ‘சேஃபர்எஸ்ஜி’ பங்காளி விருதுகள், ஐந்து ‘வாவ்’ பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

“சிங்கப்பூர் உலகின் ஆகப் பாதுகாப்பான நகரம் என்று ‘கேலப் அனைத்துலகப் பாதுகாப்பு’ அறிக்கை கூறுகிறது. இது சிங்கப்பூர்க் காவல்துறை, பல்லாண்டுகளாகச் சமூகத்தினருடன் இணைந்து பணியாற்றுவதன் வெளிப்பாடாகும்,” என்றார் திரு கோ.

சிங்கப்பூர் வணிகர் சங்கக் கூட்டமைப்பு, மோசடித் தடுப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் காப்பிக் குவளை முயற்சியைக் காவல்துறையுடன் இணைந்து மேற்கொண்டதையும் அவர் பாராட்டினார்.

தந்தை வழியில் மகன்கள்

சிங்கப்பூர்க் காவல்துறை விருதுவிழாவில் விருதுபெற்ற (இடமிருந்து) தொண்டூழியக் காவலதிகாரி முகமது ‌‌‌ஷாஹித், ‘சுற்றுக்காவலில் குடிமக்கள்’ தொண்டூழியர் பவே‌ஷ், சிங்கப்பூர் வணிகர் சங்கக் கூட்டமைப்புத் துணைத் தலைவர் ஆன்டணி லோ, தேசிய குற்றத்தடுப்பு தூதர் ஏலிஸ் ஹான்.
சிங்கப்பூர்க் காவல்துறை விருதுவிழாவில் விருதுபெற்ற (இடமிருந்து) தொண்டூழியக் காவலதிகாரி முகமது ‌‌‌ஷாஹித், ‘சுற்றுக்காவலில் குடிமக்கள்’ தொண்டூழியர் பவே‌ஷ், சிங்கப்பூர் வணிகர் சங்கக் கூட்டமைப்புத் துணைத் தலைவர் ஆன்டணி லோ, தேசிய குற்றத்தடுப்பு தூதர் ஏலிஸ் ஹான். - படம்: பெரித்தா ஹரியான்

விருது விழாவில், ‘சுற்றுக்காவலில் குடிமக்கள்’ திட்டத்தின்கீழ் விருதுபெற்ற ஆக இளையவர் திரு பவே‌ஷ் ஹரே‌ஷ் தரானி, 25.

செம்பவாங் வட்டாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக மாதம் ஓரிருமுறை ‘சுற்றுக்காவலில் குடிமக்கள்’ சீருடையை அணிந்தபடி தம் தந்தை, தம்பியுடன் வட்டாரத்தை வலம்வருகிறார் திரு பவே‌‌‌ஷ்.

“என் தந்தை பத்து ஆண்டுகளாக இத்திட்டத்தின்கீழ் தொண்டாற்றியுள்ளார். அதனால், 19 வயதில் நானும் இத்திட்டத்தில் இணைந்தேன்,” என்றார் திரு பவே‌ஷ்.

வயதானவர் ஒருவர், கைப்பேசியும் இல்லாமல் வீட்டுக்குச் செல்லும் வழியும் தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்தபோது காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உதவினார் திரு பவே‌ஷ்.

மொத்தம் 177 பேருக்குத் தலைசிறந்த ‘சேஃபர்எஸ்ஜி’ தொண்டூழியர் விருது வழங்கப்பட்டது.
மொத்தம் 177 பேருக்குத் தலைசிறந்த ‘சேஃபர்எஸ்ஜி’ தொண்டூழியர் விருது வழங்கப்பட்டது. - படம்: ரவி சிங்காரம்

மோசடித் தடுப்புகுறித்த விழிப்புணர்வு

தேசியக் குற்றத்தடுப்புத் தூதர் ஏலிஸ் ஹான், 66, மோசடித் தடுப்பு பற்றி அறிந்துகொள்வதில் மூத்தோர் எதிர்நோக்கும் மொழிசார்ந்த இடைவெளிகளைக் கடக்க உதவுகிறார்.

அவர் தானே ஒருமுறை மோசடி அழைப்பு ஒன்றை எதிர்கொண்டார். ஒருவர் காவல்துறை சீருடை அணிந்தபடி அவரைக் கைப்பேசியில் அழைத்தார்.

“ஏலிஸ், நீங்கள் இன்னும் இதற்கான கட்டணத்தைச் செலுத்தவில்லையே,” எனக் கூறியதுடன் அந்த மோசடிக்காரர் வங்கிக் கணக்குக்கான கடவுச்சொல்லையும் கேட்டார்.

அன்றிலிருந்து, “தொலைபேசி அழைப்பு வழியாக எவரேனும் பணம் கேட்டாலோ வேறு ஏதோ பரிவர்த்தனை பற்றிக் கூறினாலோ உடனடியாக 1799 எண்ணை அழைக்கவும். முன்பின் தெரியாத எவரிடமும் உங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்,” என அவர் மக்களை அறிவுறுத்திவருகிறார்.

சிங்கப்பூர் காவல்துறையுடன் தொண்டாற்ற விரும்புவோர், தொண்டூழியச் சிறப்புக் காவல்துறையினர் (VSC), தொண்டூழியச் சிறப்புக் காவல்துறையினர் (சமூகம்) (VSCC), சுற்றுக்காவலில் குடிமக்கள் (COP), குற்றத்தடுப்புத் தூதர்கள் (CPA) அல்லது அவ்வப்போது தொண்டாற்றும் திட்டங்களில் (EVP) இணையலாம்.

மேற்கூறப்பட்ட திட்டங்களிலோ ‘வாவ்’ திட்டத்திலோ இணைய விரும்புவோர் https://go.gov.sg/safersg இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்