சிங்கப்பூரில் புகைமூட்டச் சூழல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், என்95 அல்லது அதற்கு இணையான முகக்கவசங்களை அனைத்து என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிக் கிளைகளிலும், கார்டியன், யூனிட்டி, வாட்சன்ஸ் போன்ற மருந்துக் கடைகளிலும் வாங்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றுடன், கோல்ட் ஸ்டோரேஜ், ஜயண்ட், செங் சியோங் ஆகிய பேரங்காடிகளுடன் இணைந்து இந்த வார இறுதிக்குள் அவற்றின் அனைத்துக் கிளைகளிலும் என்95 அல்லது அதற்கு இணையான முகக்கவசங்கள் படிப்படியாக விற்பனைக்குக் கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஊடகங்களிடம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) அமைச்சு கூறியது.
காற்றில் மிதக்கும் நுண் துகள்களை வடிகட்டக்கூடிய என்95, கேஎன்95, கேஎஃப்94 போன்ற முகக்கவசங்களுக்கான தேவை பெருமளவில் அதிகரித்துள்ளதால், கடந்த வாரம் சில்லறை விற்பனைக் கடைகளில் முகக்கவசங்கள் மிக வேகமாக விற்றுத் தீர்ந்தன.
பொதுமக்களில் சிலர் இத்தகைய முகக்கவசங்கள் கிடைப்பது குறித்து கவலையடைந்துள்ளதை அறிந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் காற்றுத் தரம் தொடர்ந்து 16வது நாளாக ஆரோக்கியமற்ற நிலையில் நீடித்து வருகிறது.
இது, கடந்த 2015 செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 7 வரை தொடர்ந்து 14 நாட்கள் நீடித்த மோசமான புகைமூட்டக் காலத்தைவிட அதிகமாகும்.
சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருந்துக் கடைகளின் கிடங்குகளில் போதுமான அளவு முகக்கவசங்கள் இருக்கின்றன என்றும் அவற்றின் கையிருப்பு மறுபடியும் நிரப்பப்படும் வரை சில கடைகளில் தற்காலிகமாக முகக்கவசங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்றும் தான் நடத்திய சோதனையின் அடிப்படையில் அமைச்சு தெரிவித்தது.
“சுகாதார அமைச்சு முகக்கவசங்களின் அவசரகால இருப்பைப் பராமரித்து வருகிறது. பொதுமக்களின் தேவையைச் சமாளிக்க சில்லறை விற்பனையாளர்களுக்கு உதவும் வகையில் அந்த இருப்பிலிருந்து முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
வீணடிப்பதைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்களின் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் அளவுக்கு மட்டும் முகக்கவசங்களை வாங்குமாறு அது வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) இரவு 9.40 மணியளவில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
கடைகளில் முகக்கவச இருப்பை விரைவாக நிரப்புவதற்குச் சில்லறை விற்பனையாளர்கள் தங்களது விநியோகத்தை வேகப்படுத்தியுள்ளதாக அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திங்கட்கிழமை (அக்டோபர் 19) அன்று என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் சரக்குக் கிடங்கிற்குச் சென்று, அங்குள்ள குழுவினரிடம் பேசியதாகவும் அவர்கள் எவ்வாறு பொருள்களை மீண்டும் நிரப்புகிறார்கள் என்பதை நேரில் பார்த்து அறிந்ததாகவும் திருவாட்டி ஃபூ தெரிவித்தார். “அனைவரும் தங்களுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் முகக்கவசங்களை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முகக்கவசங்கள் அழுக்கடையாமலோ, ஈரமடையாமலோ, சேதமடையாமலோ அல்லது வடிவம் மாறாமலோ இருக்கும் வரை அவற்றை மீண்டும் பயன்படுத்தலாம்,” என்று அவர் தமது பதிவில் கூறியுள்ளார்.
