நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), யுனைட்டட் ஓவர்சிஸ் வங்கியிலிருந்து 110 மில்லியன் வெள்ளிப் பணத்தை நன்கொடையாகப் பெற்றுள்ளது.
சரிநிகராக அரசாங்கம் அளிக்கும் பணத்துடன், மொத்தம் 275 மில்லியன் வெள்ளி பணத்தைப் பல்கலைக்கழகம் பெறவுள்ளது.
வசதி குறைந்த என்டியு மாணவர்களுக்கான அனுகூலத் திட்டங்களுக்கும் சமூகத்திற்குப் பயனளிக்கும் காரியங்களுக்கும் இந்தப் பணம் செலவிடப்படும்.
இந்தத் தொகை, அந்தப் பல்கலைக்கழகம் பெற்றுள்ள இரண்டாவது ஆகப் பெரிய நன்கொடைத் தொகையாக உள்ளது.
1,200 என்டியு மாணவர்களை ஆதரிக்கும் மூன்று திட்டங்களுக்கும் வசதி குறைந்த பின்புலனைச் சேர்ந்த 1,500 பிள்ளைகளுக்கும் இளையர்களுக்கும் இந்த நிதி வழங்கப்படும்.
2011ல் லீ கோங் சியான் மருத்துவப் பள்ளிக்கு வழங்கப்பட்ட 150 மில்லியன் வெள்ளித் தொகை, என்டியு பெற்றுள்ள ஆகப் பெரும் பணத்தொகையாகும். பான் பசிஃபிக் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் இந்த நன்கொடை, ஏப்ரல் 14ல் அறிவிக்கப்பட்டது.
கல்வி, சுகாதாரம், சீனப் பண்பாடு ஆகியவற்றின்மீது கவனம் செலுத்தும் சிங்கப்பூர் சார்ந்த வீ அறநிறுவனத்தை அமைத்துள்ள அமரர் வீ சோ யாவ்வின் பெயரில் இந்த நன்கொடை அளிக்கப்படுகிறது.
என்டியு நல்வாய்ப்பு மானியத்தின்கீழ் (NTU Opportunity Grant), நிதிச் சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவர்கள் 10,000 வெள்ளி வரையிலான உதவி பெற்று தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்கள் தங்குவிடுதியில் தங்குவது, வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் ஓரிரு தவணைக்காலம் கழிப்பது, வகுப்பறைக்கு வெளியிலான இதர நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றுக்காக இந்த நிதியுதவியைப் பெறலாம். இதன்மூலம் 400க்கு அதிகமான முதலாமாண்டு மாணவர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து, இளம் பிள்ளைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் உதவக்கூடிய வசதி குறைந்தோருக்கான திட்டம் ஒன்றை என்டியு தொடங்கவுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், ஆண்டுதோறும் ஏறத்தாழ 1,500 இளையர்களுக்கு என்டியு மாணவர்கள், சேவைவழி, கற்றல் திட்டத்தின்வழி வழிகாட்டவுள்ளனர். மூன்றாவது திட்டமான என்டியு வென்ச்சர் கிரியேஷன் திட்டத்தின்கீழ், செயற்கை நுண்ணறிவு, நீடித்த நிலைத்தன்மை போன்ற உண்மையான உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்பைத் தலைசிறந்த மாணவர்களுக்கு நல்கும்.

