‘ஊழியர் எவரும் பின்தங்கிவிடக் கூடாது’: புதிய சம்பள வழிகாட்டிக்கு என்டியுசி வரவேற்பு

‘ஊழியர் எவரும் பின்தங்கிவிடக் கூடாது’: புதிய சம்பள வழிகாட்டிக்கு என்டியுசி வரவேற்பு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Oct 2026 - 2:07 pm

2 mins read

எத்தகைய நிதிச் சவால்கள் நிலவினாலும் அடித்தட்டில் உள்ள எந்தவோர் ஊழியரும் பின்தங்கிவிடக் கூடாது என்ற நோக்கில் வெளியிடப்பட்ட தேசிய சம்பள மன்றத்தின் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) வரவேற்றுள்ளது.

இது குறித்துப் பேசிய என்டியுசி தலைவர் கே.தனலெட்சுமி, “இழப்பைச் சந்திக்கும் நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்தக் குறைந்தபட்ச ஊதிய உயர்வு நிதிப் பாதுகாப்பை அளிக்கும்.

“இந்தப் பரிந்துரைகளை மேம்பட்ட சம்பள உயர்வாக மாற்றுவதற்காக முதலாளிகளுடன் இணைந்து என்டியுசி தொடர்ந்து செயலாற்றும்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய சம்பள மன்றம் 2026/2027 ஆண்டிற்காக திங்கட்கிழமை (அக்டோபர் 19) புதிய வழிகாட்டிகளை வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் இக்கருத்தை முன்வைத்தார். 

இம்முறை சிறப்புமிக்க மாற்றமாக, நிதி நெருக்கடியில் உள்ள, இழப்பை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்காக தனிப்பிரிவு ஒன்று முதன்முறையாக அறிமுகம் கண்டுள்ளது.

இதன்படி, நிறுவனங்களின் நிதிச்சுமையையும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் சமநிலைப்படுத்தும் நோக்கில், நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களும் தங்களின் குறைந்த வருமான ஊழியர்களுக்கு குறைந்தபட்ச உயர்வை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இப்பரிந்துரைகளின் உண்மையான தாக்கம், நிறுவனங்கள் இவற்றை எந்த அளவுக்கு ஏற்று நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதையே சார்ந்துள்ளதாக சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. 

இதனைக் கருத்தில்கொண்டு, நிறுவனங்கள் இப்பரிந்துரைகள் குறித்து அறிந்துகொள்ளவும் சம்பள நடைமுறைகளைச் சீரமைக்க உதவும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என சம்மேளனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தேவையால் மின்னியல், துல்லியப் பொறியியல் உள்ளிட்ட உற்பத்தித் துறைகள் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளன. அதேவேளையில் உணவு, பானம் போன்ற பயனீட்டாளர் சார்ந்த துறைகள் சவால்களை எதிர்கொண்டுள்ளன. 

இதன் காரணமாக 2026 முழுவதுக்குமான பொருளியல் வளர்ச்சி 4.5 விழுக்காடு முதல் 5.5 விழுக்காடு வரை இருக்கும் என எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சம்பளம்ஊழியர்சிங்கப்பூர்