‘கென்வஸ்’ கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தும் என்யுஎஸ், சிம்

‘கென்வஸ்’ கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தும் என்யுஎஸ், சிம்

2 mins read
0b5687c9-f9c4-4274-bbc2-424521111bce
‘கென்வஸ்’ தள ஊடுருவலால் பாதிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகமும் ஒன்று. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அனைத்துலக அளவில் பயன்படுத்தப்படும் ‘கென்வஸ்’ என்ற இணையத்தளம் ஊடுருவப்பட்டதை அடுத்து, சிங்கப்பூரின் இரண்டு பல்கலைக்கழகங்கள் கடவுச்சொற்களை மாற்றும்படி அவற்றின் ஊழியர்களிடமும் மாணவர்களிடமும் அறிவுறுத்தியுள்ளன.

‘கென்வஸ்’ தளத்தை இதற்குமுன் பயன்படுத்தியோர் முன்னெச்சரிக்கையாகக் கடவுச்சொற்களை மாற்றும்படி சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகமும் சிம் பல்கலைக்கழகமும் கூறின.

பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல், ‘விபிஎன்’ ஆகிய தகவல் தொழில்நுட்பத் தளங்களுக்குச் செல்வோர் கடவுச்சொற்களை மாற்றும்படி திரையில் அறிவுறுத்தப்படும் என்று சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.

நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்துவருவதாகச் சொன்ன பல்கலைக்கழகம், ‘கென்வஸ்’ தளத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டது.

மிக முக்கியமான கல்வி அல்லது செயல்பாட்டுத் தொடர்பான காரணங்களுக்காக மட்டுமே ‘கென்வஸ்’ தளத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றது பல்கலைக்கழகம்.

திங்கட்கிழமை (மே 11) முதல் வியாழக்கிழமை (மே 14) வரை அந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும். மே 14ஆம் தேதிக்குப் பிறகு தேவை ஏற்பட்டால் தற்போதுள்ள கட்டுபாடு நீட்டிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் சொன்னது.

சிம் பல்கலைக்கழகம் மாணவர்களிடமும் ஊழியர்களிடமும் கடவுச்சொற்களை மாற்றும்படி மின்னஞ்சல்வழி அறிவுறுத்தியது.

‘கென்வஸ்’ தளத்தில் பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை வேறு தளங்களிலும் மாற்றும்படி பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.

அறிமுகம் இல்லாத குறுஞ்செய்திகள், தளங்கள் குறித்து கவனமாக இருக்கும்படியும் பல்கலைக்கழகம் எச்சரித்தது.

கடவுச்சொல் விவரங்களைக் கேட்டு ‘கென்வஸ்’ தளத்தைக் குறிப்பிட்டு போலியான மின்னஞ்சல்களும் குறுஞ்செய்திகளும் வரக்கூடும் என்றது பல்கலைக்கழகம்.

இம்மாதம் 7ஆம் தேதி அனைத்துலக அளவில் ஊருடுவப்பட்ட ‘கென்வஸ்’ தளத்தால் பல்வேறு பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றுள் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகமும் சிம் பல்கலைக்கழகமும் அடங்கும்.

‌‌’ஷைனிஹன்டர்ஸ்’ என்ற குற்றக் கும்பல், கென்வஸ் தளத்தை ஊருடுவியதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்