தேசியநிலைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வி அமைச்சர்

தேசியநிலைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வி அமைச்சர்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Oct 2026 - 7:41 pm

3 mins read

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் நீடித்து வரும் சூழலில், சிங்கப்பூரில் உள்ள பள்ளிகள் தொடர்ந்து திறந்திருக்கும் என்றும், தேசியநிலைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) மாலை நடந்த புகைமூட்டம் தொடர்பான அமைச்சரவைப் பணிக்குழுவின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதே அரசின் நோக்கம் என்றார்.

24 மணி நேர பிஎஸ்ஐ குறியீடு 301ஐத் தாண்டி அபாயகரமான நிலையை எட்டினால் மட்டுமே பள்ளிகளை மூடுவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அத்தகைய சூழலில் பாலர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை வீட்டிலிருந்தே கற்கும் முறைக்கு மாறலாம் என்றும் ஆனால் அந்த நிலையிலும், வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியாத பெற்றோர்களுக்காக அனைத்து பாலர் பள்ளிகள், தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள், அவர்களுக்கான பராமரிப்பு மையங்கள் திறந்தே இருக்கும் என்றும் தெரிவித்தார் திரு லீ.

சமூகச் சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு லீ, “மாணவர்கள் தேசியநிலைத் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்க விரும்புகிறோம்,” என்று கூறினார்.

அடுத்த வாரம் அக்டோபர் 19ஆம் தேதி முதல் ‘ஓ’ நிலை எழுத்துத் தேர்வுகளும், ‘ஏ’ நிலைச் செய்முறைத் தேர்வுகளும் தொடங்க உள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பு வந்துள்ளது. 

மாணவர்களுக்கான இத்தேர்வுகள் அனைத்தும் குளிரூட்டப்பட்ட, காற்றுச் சுத்திகரிப்பான் பொருத்தப்பட்ட அறைகளில்தான் நடத்தப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். 

இச்சந்திப்பின்போது பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் திட்டம் குறித்து விளக்கிய அமைச்சர், அன்றாட முடிவுகள் இரண்டு கட்டமாக எடுக்கப்படுவதாகக் கூறினார்.

மறுநாளுக்கான முடிவு முதல்நாள் மாலை தேசியச் சுற்றுப்புற அமைப்பின் 24 மணி நேர காற்றுத் தரக் குறியீடு (பிஎஸ்ஐ) முன்னறிவிப்பை வைத்து எடுக்கப்படும் என்ற அமைச்சர், குறிப்பிட்ட இடைவேளைகளில் கணக்கிடப்படும் முடிவுகளை வைத்துப் பள்ளிகள் வகுப்புகளின் நேரத்தை மாற்றியமைப்பது, வெளிப்புற விளையாட்டுகளைத் தவிர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சொன்னார்.

பிஎஸ்ஐ குறியீடு 151 முதல் 250 வரை சென்றால் மாணவர்கள் உணவை வகுப்பறைக்குள்ளேயே உண்பர் என்றும் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் என்றும் விளக்கினார் அமைச்சர்.

தேர்வு எழுத முடியாத அளவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், மாணவர்கள் மருத்துவரைப் பார்த்து மருத்துவச் சான்றிதழ் பெற்று பள்ளி மூலம் சிறப்புப் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வகையில் பாதிக்கப்பட்ட தேர்வுத்தாள்கள் விரைவில் மறு தேதியில் நடத்தப்படுவதற்கான அறிவிப்புகளைச் சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகம் வெளியிடும் என்றும் திரு லீ கூறினார்.

“புகைமூட்டம் தொடர்பாகப் பெற்றோர், குறிப்பாகத் தேர்வு எழுதும் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர் கவலையடைவது இயற்கையே. மாணவர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அமைச்சு தொடர்ந்து மேற்கொள்ளும்,” என்றும் அவர் சொன்னார்.   

தமது உரையின்போது பள்ளிகள் மூடல் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் பெற்றோர் ‘பேரன்ட்ஸ்கேட்வே’ செயலி உட்படக் கல்வி அமைச்சின் அதிகாரபூர்வத் தகவல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் லீ கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
புகைமூட்டம்சிங்கப்பூர்மாணவர்தேர்வுகல்வி அமைச்சு