தோ பாயோ குடியிருப்புப் பேட்டை புளோக் ஒன்றில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கடந்த சில மாதங்களாக தாங்கள் வசிக்கும் இடத்தில் துர்நாற்றம் வீசுவதாக கூறிவருகின்றனர். தங்கள் புளோக்கில் வசிக்கும் ஒருவர் விடியற்காலை திரவத்தை வீட்டு சன்னலிலிருந்து வீசும்போதெல்லாம் சிறுநீர் துர்நாற்றம் வீசுவதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் அந்த நபர் சிறுநீரை சன்னலிலிருந்து கீழே வீசுவதாக அந்த புளோக்கில் வசிப்பவர்கள் நம்புகின்றனர்.
தோ பாயோ லோரோங் ஒன்று புளோக் 104ல் குடியிருப்பவர்கள் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து துர்நாற்றத்தை தாங்கமுடியாமல் தவிக்கின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர். இறுதியில் குறும்புச்செயல் செய்பவரை கையும் களவுமாக பிடிக்க குடியிருப்பாளர்கள் சிலர் முடிவெடுத்தனர்.
சில நாள்களுக்கு முன், விடியற்காலையில் எழுந்து தங்கள் சன்னலுக்கு அருகே கேமராவில் நடந்ததை பதிவுசெய்தனர். புளோக்கின் மூன்றாவது மாடியில் வசிக்கும் ஒருவர் சன்னலிலிருந்து திரவத்தை வீசியெறிவது பதிவானது. தங்கள் புளோக்கில் அடிக்கடி சிகரெட் துண்டுகள், உணவு, குப்பை, சானிட்டரி நாப்கின்கள் போன்றவற்றை வீசியெறிவதும் இதே நபர்தான் என்று குடியிருப்பாளர்கள் நம்புகின்றனர்