கடந்த 2023ஆம் ஆண்டு, மார்ச் 23ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த துணைக் காவல்துறை அதிகாரியை மதுபோதையில் வாகனம் ஓட்டி மோதி, படுகாயப்படுத்திய வாகன ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த ‘சிஸ்கோ’ அதிகாரியான திரு இங், நிரந்தரமாக செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் பாதை தவறிய 44 வயது ஓட்டுநர் யூங் கொக் காய், துவாஸ் சோதனைச் சாவடியை அடைந்துள்ளார். மிகவேகமாக வாகனத்தை ஓட்டியவர், அதன் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு பணியில் இருந்த அதிகாரியை மோதியுள்ளார்.
கீழ்நீதிமன்றம் அவருக்கு விதித்த மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து அரசாங்க வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். அதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) ஐந்து ஆண்டுகளாக அதிகரித்தது. மேலும் கீழ்நீதிமன்றத் தீர்ப்பில் விடுபட்ட $10,000 அபராதமும் இம்முறை சேர்த்து விதிக்கப்பட்டது. தண்டனையின் அங்கமாகச் சிறையில் இருந்து விடுதலை ஆனதும் 10 ஆண்டுகளுக்கு எவ்வித வாகனங்களையும் ஓட்ட அவருக்கு அனுமதி இல்லை.
உயர் நீதிமன்ற நீதிபதி, மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதன் அவசியம் குறித்து தீர்ப்பு வழங்கும்போது வலியுறுத்தினார்.
அரசாங்க வழக்கறிஞர் நிக்கலஸ் கூ, குற்றவாளி எவ்வித மன்னிப்பும் கேட்கவில்லை என்றார். மேலும் அதிகாரியின் மருத்துவக் கட்டணங்களுக்கும் பொதுச் சொத்துக்கு ஏற்படுத்திய சேதத்துக்கும் ஓட்டுநர் பொறுப்பேற்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

