பொதுப் பயனீட்டுக் கழகத்தின் (பியூபி) சுவா சூ காங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நச்சு வாயுவைச் சுவாசித்து உயிரிழந்த இரண்டு ஊழியர்களும் சுவாசக் கவசங்களை அணியவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பணியிடத்தில் நுழைவதற்கு முன்பு அப்பகுதியில் காற்றோட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற விதிமுறை உட்பட பல பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று இச்சம்பவத்தை விசாரித்த மனிதவள அமைச்சின் மூத்த விசாரணை அதிகாரியான முகமட் ஹஃபிட்ஸ் தெரிவித்தார்.
அந்த இரு ஊழியர்களின் மரணம் குறித்து மரண விசாரணை அதிகாரியின் முதல் நாள் விசாரணையில் அவர் சாட்சியமளித்தார்.
மலேசியரான இசாத் நகியுதீன் தவூத், 24, இந்திய நாட்டவரான சீனிவாசன் சிவராமன், 40, ஆகிய இருவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நடைமுறையின்போது உருவாகும் ஹைட்ரஜன் சல்ஃபைட் வாயுவைச் சுவாசித்த பிறகு மயங்கி விழுந்தனர். ஹைட்ரஜன் சல்ஃபைட் நிறமற்றது, குறைந்த அளவில் இருந்தால்கூட உயிரைப் பறிக்கக்கூடியது.
மே 23, 2024 அன்று காலையில் வடிகால் கட்டுப்பாட்டுக் குழாயை மூடுவதற்காக இசாத்தும் மூன்றாவது ஊழியரும் அடைக்கப்பட்ட நடைபாதைக்குள் நுழைந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அவர்களைப் பார்க்க சிவராமன் சிறிது நேரத்திலேயே அந்த நடைபாதைக்குள் நுழைந்திருக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.
இசாத்தும் சிவராமனும் மீட்கப்பட்டபோது இருவரும் சுவாசக் கவசத்தை அணிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இருவரும், மே 2024ஆம் ஆண்டின் சம்பவத்தில் காயமடைந்து உயிரிழந்தனர். அதே வேளையில் மூன்றாவது ஊழியர் உயிர் தப்பினார்.
‘ஸ்டார்குரூப் எஸ்ட்’ என்ற நிறுவனத்துக்காக இசாத் பணியாற்றினார். சிவராமன் ‘சூப்பர்சோனிக் மெயின்டனன்ஸ் சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தில் துப்புரவு செயல்பாட்டு நிர்வாகியாக இருந்தார்.
