வீட்டு உரிமையாளர்கள் வசிக்கும் வீடுகளுக்கான சொத்து வரிக்கு 2026ஆம் ஆண்டில் ஒருமுறைக் கழிவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் வசிக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான சொத்து வரிக்கு 15 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.
சொத்து வரி அதிகரிப்பைச் சமாளிக்க வீட்டு உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தனியார் வீடுகளைப் பொறுத்தவரை, வீட்டு உரிமையாளர் தங்கும் வீடுகளுக்கான சொத்து வரி 10 விழுக்காடு குறைக்கப்படும்.
கழிவுக்கான வரம்பு $500 என்று நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) இணைந்து அறிக்கை வெளியிட்டன.
வீட்டு வாடகைச் சந்தை மிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாடகைத் தொகை சிறிதளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சொத்து வரிகள் ஏற்றம் கண்டிருப்பதால் சிங்கப்பூரர்கள் சிரமப்படாமல் இருக்க சொத்து வரிக்கான கழிவு வழங்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் செலுத்தப்பட வேண்டிய சொத்து வரியிலிருந்து இந்தக் கழிவுத் தொகை கழிக்கப்படும். இதுகுறித்து வீட்டு உரிமையாளர்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.
செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி தொடர்பான தகவல் இவ்வாண்டு டிசம்பர் மாதத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வீட்டின் வருடாந்திர மதிப்பை அடிப்படையாகக் கொண்டு சொத்து வரி கணக்கிடப்படுகிறது.
வீட்டை ஓர் ஆண்டுக்கு வாடகைக்கு விட்டால் தோராயமாக எவ்வளவு கிடைக்குமோ அதுவே சொத்தின் வருடாந்திர மதிப்பாக நிர்ணயிக்கப்படுகிறது.
இதே போல கழிவை அரசாங்கம் 2024ஆம் ஆண்டில் வழங்கியது.
வாழ்க்கைச் செலவினம் குறித்து வீட்டு உரிமையாளர்களுக்கு இருந்த கவலையைப் போக்கும் இலக்குடன் கழிவு வழங்கப்பட்டது.
வரிக் கழிவுக்குப் பிறகு மூவறை மற்றும் அதைவிட பெரிய வீவக வீடுகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி மாதத்துக்குச் சராசரியாக $2 முதல் $3 வரை அதிகரிக்கும்.
ஓரறை மற்றும் ஈரறை வீவக வீடுகளில் வசிக்கும் அவ்வீடுகளின் உரிமையாளர்கள், சொத்து வரி செலுத்தத் தேவையில்லாத நிலை தொடர்கிறது.
சொத்து வரிக் கழிவுக்குப் பிறகு, வீட்டு உரிமையாளர்கள் வசிக்கும் தனியார் வீடுகளுக்கான சொத்து வரி அதிகரிப்பு மாதத்துக்கு $6க்கும் குறைவாக இருக்கும்.

