புகைமூட்டம் தொடர்வதால் உணவு, பான வணிகங்களுக்குப் பாதிப்பு

புகைமூட்டம் தொடர்வதால் உணவு, பான வணிகங்களுக்குப் பாதிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Oct 2026 - 6:04 pm

2 mins read

தேக்கா உணவு நிலையத்தில் பத்தாண்டுகளாக முஸ்லிம் உணவுக்கடை நடத்திவரும் 73 வயது ஸைத்துன் பீ, வாடிக்கையாளர்கள் வருகை பேரளவு சரிந்ததால் கடையை மூடுவது குறித்து யோசித்து வருகிறார்.

புகைமூட்டத்திற்குமுன் நாள்தோறும் 500 வாடிக்கையாளர்கள் வந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 200ஆகக் குறைந்துவிட்டதாக அவர் சொன்னார்.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) காலை 10 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு நேரில் சென்று பார்த்தபோது, தேக்கா நிலையத்தில் பாதி இருக்கைகள் காலியாக இருந்தன.

வாடகை, மின்சாரம், பாத்திரம் கழுவும் கட்டணம் என மாதம் $4,000 செலவு இருக்கும் நிலையில், சரிந்துவரும் வருமானத்தால் வியாபாரத்தைத் தொடர்வது குறித்து அவர் கவலையில் உள்ளார்.

“இப்போது வணிகமே இல்லை, மிகவும் சலிப்பாக இருக்கிறது. கடையை மூடிவிடலாம் என்று நினைக்கிறோம். வியாபாரம் செய்ய முடியவில்லை என்றால், இன்னும் சில மாதங்களிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ கடையை விட்டுவிடக்கூடும்,” என்று திருவாட்டி ஸைத்துன் கவலை தெரிவித்தார்.

தீபாவளிக் காலத்திலும் தேக்கா நிலையத்தில் உள்ள கடைகளில் கூட்டமில்லை.
தீபாவளிக் காலத்திலும் தேக்கா நிலையத்தில் உள்ள கடைகளில் கூட்டமில்லை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீபாவளிக் காலத்திலும் தேக்கா நிலையத்தில் உள்ள கடைகளில் கூட்டமில்லை. பானக்கடை நடத்துவதில் தம் சகோதரருக்கு உதவிவரும் முகம்மது யூசோப் சையது முகம்மது, புகைமூட்டம் தொடங்கியதிலிருந்து வாடிக்கையாளர் வருகை 30 விழுக்காடு குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் தேக்கா நிலையத்தில் திரளும் மக்கள், புகைமூட்டத்தால் இப்போது வீடுகளிலேயே இருந்துவிடுவதாகத் தெரிகிறது.

கோவன் 209 சந்தை, உணவு நிலையத்திலும் சீன உணவுக்கடை ஒன்றின் வியாபாரம் மூன்றில் ஒரு பங்காகச் சரிந்துள்ளது. அரசாங்கம் தங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என அங்குள்ள ஊழியர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹாலந்து டிரைவ் சந்தை, உணவு நிலையக் கடைக்காரர்களும் இழப்பு ஏற்படும் என அஞ்சுகின்றனர்.

உட்புற இருக்கை வசதி கொண்ட உணவகங்களும் புகைமூட்டப் பாதிப்பிலிருந்து தப்பிக்கவில்லை. சிங்கப்பூரில் 18 கிளைகளைக் கொண்டுள்ள ஹாரிஸ் உணவகம், வாடிக்கையாளர் வருகையில் 40 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளது.

காற்றின் தரத்தைப் பாதுகாக்க வெளிப்புற உணவருந்தும் இடங்கள் மூடப்பட்டுள்ளதாக உணவகத்தின் சந்தைப்படுத்துதல் தலைவர் ஸ்டெஃபனி ஹாவ் தெரிவித்தார்.

புகைமூட்டம் தொடர்ந்தால் உணவு, பானத் துறை மேலும் பாதிக்கப்படும் என வணிகர்கள் அஞ்சுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்