சிங்கப்பூரில் நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை மட்டும் இணையத்தில் பாலியல் சேவை மோசடி மூலம் குறைந்தது 20,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் ஆறு மோசடிச் சம்பவங்கள் பதிவானதாகக் காவல்துறை புதன்கிழமை (டிசம்பர் 3) தெரிவித்தது.
டிக்டாக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள்வழி மோசடிக்காரர்கள் பொதுமக்களைத் தொடர்புகொண்டு ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர்.
மோசடிக்காரர்கள், இணையப் பாலியல் சேவை வழங்குவதாகக் கூறி செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்யச் சொல்வார்கள். அந்தச் செயலிமூலம் மோசடிக்காரர்கள் பொதுமக்களின் கைப்பேசியை ஊடுருவி ரகசியத் தரவுகளைத் திருடுவார்கள்.
திருடப்பட்ட தரவுகளைக் கொண்டு மோசடிக்காரர்கள் மிரட்டி பணம் பறிப்பர்.
பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

