பொங்கோல் வாசிகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதிய பொங்கோல் கோஸ்ட் பேருந்துச் சந்திப்பு நிலையம் ஜூன் 29ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
சென்டுல் வாக்கில் அமைந்துள்ள இந்த நிலையம், வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் உள்ள பொங்கோல் கோஸ்ட் பெருவிரைவு ரயில் நிலையத்துடனும் அண்மையில் திறக்கப்பட்ட பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதியுடனும் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
இது சிங்கப்பூரின் 15வது ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து நடுவமாகும்.
தற்போது பொங்கோல் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் இயக்கப்படும் பேருந்துச் சேவைகளான 34, 117, 117M ஆகியவை புதிய பொங்கோல் கோஸ்ட் பேருந்துச் சந்திப்பு நிலையத்துக்கு மாற்றப்படவுள்ளன.
இதனையடுத்து, பேருந்துச் சேவை 117ன் பயணப் பாதை, மேலும் எட்டு பேருந்து நிறுத்தங்களுடன் நீட்டிக்கப்படும். அதேநேரம், பேருந்துச் சேவை 34, பொங்கோல் சென்ட்ரலுக்கு செல்லும் வழியில் ஏழு புதிய நிறுத்தங்களும் பேருந்து நிலையத்து திரும்பும் பாதையில் எட்டு நிறுத்தங்களும் சேர்க்கப்படும்.
இம்மாற்றங்கள் பொங்கோலில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தி, சுமாங் வாக், சென்டுல் கிரசெண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போருக்கு சாங்கி விமான நிலையத்துக்கும் தெம்பனிஸ், ஈசூன் போன்ற இடங்களுக்கும் நேரடி பயணப் பாதைகளை வழங்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
புதிய பொங்கோல் கோஸ்ட் பேருந்துச் சந்திப்பு நிலையத்தை செவ்வாக்கிழமை (மே 20) பார்வையிட்ட போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நேரங்களில் நகரை நோக்கி நேரடியாகச் செல்லும் சேவைகளை உள்ளடக்கிய புதிய பேருந்துப் பாதைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடைய மேம்பாடுகளும் சேவைகளும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு வசதியுடைய கழிவறைகள், குழந்தைப் பராமரிப்பு அறை, உணர்வுபூர்வ தேவைகளைக் (sensory needs) கொண்டுள்ள பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி அறை, தடங்கலற்ற நடமாட்ட வசதிகள் ஆகியவை புதிய நிலையத்தில் உள்ளன. கூடவே, ஊழியர்களுக்கான உணவகம், ஓய்வறை போன்ற தனிப்பட்ட வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நிலைத்தன்மைக்குப் பங்காற்றும் வகையில் எல்இடி விளக்குகள், நீர் சேமிக்கும் குழாய்கள், உணர்கருவிகள் போன்று எரிசக்தியைச் சேமிக்கும் அம்சங்கள் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
பொங்கோல், பாசிர் ரிஸ் பேருந்துச் சந்திப்பு நிலையங்களை நிர்வகிக்கும் கோ-அஹெட் சிங்கப்பூர் நிறுவனம் இந்தப் புதிய நிலையத்தையும் நிர்வகிக்கும்.
புதிய நிலையத்தில் பேருந்து நிறுவனங்கள் முறையாகப் பணியாற்ற நிலப் போக்குவரத்து ஆணையம் தேவையான ஆதரவை வழங்கி, செயல்பாடுகள் சீராக நடைபெறும் வகையில் அவற்றை விரிவாகக் கண்காணிக்கும் எனக் கூறியது.
பேருந்துச் சேவை விரிவாக்கங்கள் குறித்த மேல்விவரங்கள் பேருந்து நிறுத்தங்களிலும் இணையத்தளத்திலும் வெளியிடப்படும்.

