வழக்கறிஞர் சங்க புதிய தலைவருக்கு எதிர்ப்பு

2 mins read
7320b942-4165-4590-8720-ee547e235e03
சங்க உறுப்பினர்களில் சிலர் தினேஷ் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். - படம்: மேக்ஸ்வெல்சேம்பர்ஸ்

சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

அண்மையில் தினேஷ் சிங் திலான் அதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான கூட்டத்தை நடத்தத் தயாராகி வருகின்றனர்.

இதே வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களும் பழம்பெரும் வழக்கறிஞர்களான பீட்டர் குத்பெர்ட் லோ மற்றும் சந்திர மோகன் நாயர் ஆகியோர் தலைமையில் எதிர்ப்புக் குழு செயலில் இறங்கியிருக்கிறது.

திரு தினேஷ், புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க டிசம்பர் 22ஆம் பொதுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

டிசம்பர் 9ஆம் தேதி வழக்கறிஞர் சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவரது நியமனத்தின் விளைவுகள் குறித்து விவாதிக்க வேண்டியிருப்பதாக உறுப்பினர்கள் கூறியுள்ளனர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இந்தக் கடிதத்தைப் பார்த்துள்ளது.

திரு தினேஷ், மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்காமலே தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதே எதிர்ப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

சிங்கப்பூரில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தச் சங்கத்தில் ஏறக்குறைய 6,400 உறுப்பினர்கள் உள்ளனர்.

சட்டத் தொழில் சட்டத்தின்கீழ் மன்றத்திற்கு மூன்று உறுப்பினர்களை சட்ட அமைச்சர் நியமிக்க முடியும். இம்முறை கொண்டுவரப்பட்ட மூவரில் ஒருவர் திரு திலான்.

அதன் பிறகு மன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்தத் தேர்தல் நடைபெற்று புதிய 21 உறுப்பினர்களைக் கொண்ட மன்றத்திற்கு தினேஷ் தலைமையேற்பார் என்று நவம்பர் 17ஆம் தேதி வழக்கறிஞர் சங்கம் அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்