ஆர்ச்சர்ட் ரோட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சண்டையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரிடம் கத்தியைக் கொடுத்து, பின்னர் ஆதாரத்தை அப்புறப்படுத்திய மதுபானக் கூட பாதுகாப்பு ஊழியருக்கு (bouncer) எட்டு மாதங்கள், ஆறு வாரங்கள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
முகம்மது ஸக்காரி டானியால் முகம்மது அஸார் புதன்கிழமை (நவம்பர் 13) இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
சென்ற ஆண்டு, ஆகஸ்ட் 20ஆம் தேதி கொன்கோர்ட் ஹோட்டலுக்கு வெளியே நடந்த சண்டையில், திரு முகம்மது இஸ்ராட் முகம்மது இஸ்மாயில் உயிரிழந்தார்.
அந்தச் சண்டையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கபப்டும் 10க்கும் மேற்பட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரான அஸ்வேன் பச்சான் பிள்ளை சுகுமாறன், 29, மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

