தடுப்புக் காவலில் இருந்தவரின் கணக்குகளை நீக்க உத்தரவு

2 mins read
e263f420-ed18-4062-935d-bd2378a098d2
ஆஸ்திரேலியரான 54 வயது ஸுல்ஃபிக்கர் சிங்கப்பூரில் உள்ள பல்லின, பல சமய மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டிவிடும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார். - படம்: பெரித்தா ஹரியான்

முன்னாள் சிங்கப்பூரரான ஸுல்ஃபிக்கர் முகம்மது ஷரிஃபின் சமூக ஊடகக் கணக்குகளை நீக்க டிக்டாக்கிற்கும் ஃபேஸ்புக்கிற்கும் சிங்கப்பூர்க் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியரான 54 வயது ஸுல்ஃபிக்கர் சிங்கப்பூரில் உள்ள பல்லின, பல சமய மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டிவிடும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.

பயங்கரவாதத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டதற்காகவும் இணையம் வழியாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைப் பாராட்டியதற்காகவும் 2016ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஸுல்ஃபிக்கர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் இஸ்லாமியச் சமயத்தைத் துறந்து சீன சமூகத்துடன் ஒன்றிணைய மலாய் முஸ்லிம்கள் வற்புறுத்தப்படுவதாக ஜூன் மாதம் 19ஆம் தேதியன்று ஸுல்பிக்கர் டிக்டாக்கில் பதிவிட்டார்.

சிங்கப்பூரில் உள்ள சீனர்கள் குடியேறிகள் அல்லர் என்றும் அவர்கள் பிரிட்டிஷ் காலனித்துவக் காலகட்டத்தில் சிங்கப்பூரைத் தங்கள் வசிப்பிடமாக்கிக்கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கும் காணொளியை ஜூலை மாதம் 18ஆம் தேதியன்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார்.

சிங்கப்பூருக்கே உள்ள சித்தாந்தம் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மலாய்க்காரர்களுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகவும் ஸுல்ஃபிக்கர் தெரிவித்தார்.

இணையம் மூலம் குற்றவியல் தீங்குச் சட்டத்தின்கீழ் ஸுல்ஃபிக்கரின் சமூக ஊடகக் கணக்குகளை நீக்குமாறு டிக்டாக்கிற்கும் ஃபேஸ்புக்கிற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி அவ்விரு கணக்குகளும் முடக்கப்படக்கூடும்.

எக்ஸ் தளத்துக்கு இத்தகைய உத்தரவு விடுக்கப்படவில்லை.

அந்தத் தளத்திலும் ஸுல்ஃபிக்கர் அதே மாதிரியான கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.

ஸுல்ஃபிக்கரின் மற்ற சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் பக்கங்களில் உள்ள பதிவுகள் தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடத்துவதாக உள்துறை அமைச்சு கூறியது.

தேவை ஏற்பட்டால் அவற்றையும் நீக்க உத்தரவிடப்படும் என்று அது தெரிவித்தது.

ஸுல்ஃபிக்கர் தமது குடும்பத்துடன் 2002ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார் என்றும் அங்கிருந்து இத்தகைய பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருநாடுகளின் குடியுரிமைகளை அவர் வைத்திருந்ததாகவும் ஆஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து அரசு மானியங்கள் மற்றும் வேலையின்மை மானியங்களைப் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூர் குடியுரிமையை ஸுல்ஃபிக்கர் துறந்தார்.

குறிப்புச் சொற்கள்