உயிர்களைக் காப்பாற்றவும் மருத்துவ ஆய்வுக்காகவும் உடல் உறுப்புத் தானம்

2 mins read
e3b722e4-3b51-4c7f-9c39-a47d1f3f9db8
மாண்டோரிடமிருந்து அவர்களது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு, உடல் உறுப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு அவை செலுத்தப்படும் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட ஆக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. - படம்: சாவ்பாவ்

உடல் உறுப்புத் தானம் சிங்கப்பூரில் சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

உடல் உறுப்புத் தான விகிதத்தை உயர்த்தி கூடுதல் உயிர்களைக் காப்பாற்ற இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்திலிருந்து விலக விண்ணப்பம் செய்யும் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் ஆகியோர் மட்டுமே இதில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள். மற்றவர்கள் அனைவரும் இத்திட்டத்துக்கு உட்படுத்தப்படுவர்.

சிங்கப்பூரில் 400க்கும் மேற்பட்ட நோயாளிகள், தங்களுக்குப் பொருந்தும் உடல் உறுப்புக்காக ஐந்து ஆண்டிலிருந்து 17 ஆண்டுகள் வரை காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டோரின் குடும்பத்தினர் உடல் உறுப்புத் தானத்துக்கு மறுப்பு தெரிவிப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

இருப்பினும், மாண்டோரிடமிருந்து அவர்களது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு, உடல் உறுப்பு தேவைப்படும் நோயாளிகளுக்குப் பயன்படும் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட ஆக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2013ஆம் ஆண்டில் சிறுநீரகங்களைத் தானம் செய்த மாண்டோர் விகிதம் ஒரு மில்லியன் பேருக்கு 6.3 பேராக இருந்தது. 2023ஆம் ஆண்டில் இது ஒரு மில்லியன் பேருக்கு 6.59 பேராக ஏற்றம் கண்டது.

அதே காலகட்டத்தில் கல்லீரல் தானம் செய்த மாண்டோர் விகிதம் 3.52லிருந்து 3.89ஆக உயர்ந்தது.

இதயத்தைத் தானம் செய்த மாண்டோர் விகிதம் 0.74லிருந்து 0.85ஆக அதிகரித்தது.

உயிர்களைக் காப்பாற்றவும் ஆய்வுகளுக்கு ஆதரவு வழங்கவும் தனிநபர்கள் தங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்யலாம்.

மருந்துச் (சிகிச்சை, கல்வி, ஆய்வு) சட்டத்தின்கீழ் உடல் உறுப்புத் தானத் திட்டத்தில் தனிநபர்கள் சேரலாம். அவ்வாறு சேருபவர்கள், மரணம் அடைந்த பிறகு அவர்களது உடல் உறுப்புகள் கல்விக்காகவோ அல்லது ஆய்வுக்காகவோ பயன்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின்கீழ் தங்கள் முழு உடலையும் தனிநபர்கள் தானம் செய்யலாம்.

2020ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒவ்வோர் ஆண்டிலும் 500க்கும் மேற்பட்டோர் தங்கள் முழு உடலையும் இத்திட்டத்தின்கீழ் தானம் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்